வாஷிங்டன்: ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக கணக்கெடுப்பின்படி, கரோனாவால் உலகில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பத்து லட்சத்தைத் தாண்டியுள்ளது.
"உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பத்து லட்சத்து 15 ஆயிரத்து 403, அதில் 53 ஆயிரத்து 30 பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டு லட்சத்து 10 ஆயிரத்து 579 பேர் குணமடைந்துள்ளனர்" என கணினி அறிவியல் மற்றும் பொறியியலுக்கான பல்கலைக்கழக மையம் வெளியிட்டதை ஷின்ஹுவா செய்தி முகமை மேற்கோள் காட்டியிருக்கிறது.
தங்கள் நாட்டில் கரோனாவால் இரண்டு லட்சத்து 45 ஆயிரத்து 213 பேர் பாதிக்கப்பட்டும் ஐந்தாயிரத்து 983 பேர் உயிரிழந்தும் உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மொத்த பாதிப்பு என்று பார்த்தால் உலகிலேயே அமெரிக்காவில்தான் அதிகம்.
இத்தாலியில் கோவிட்-19 தாக்கம் கோரத்தாண்டவமாடி வருகிறது. அங்கு ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 242 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகின் உச்சபட்ச உயிரிழப்பு அங்குதான் நிகழ்ந்துள்ளது. இத்தாலியில் மொத்தம் 13 ஆயிரத்து 915 பேரை கரோனா காவு வாங்கியுள்ளது.
கோவிட்-19ஆல் உலகில் அதிகம் பாதித்த நாடுகளில் ஸ்பெயினுக்கு மூன்றாவது இடம். அந்நாட்டில் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 65 பேருக்கு கரோனா தொற்று உள்ளது. அதேபோல் உயிரிழப்பில் அந்நாடு இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. அதன்படி, அங்கு மொத்தம் 10 ஆயிரத்து 348 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதையும் படிங்க: "ஏப்ரல் 5 இல் 9 நிமிடங்கள் வீடுகளில் அகல் விளக்கு ஏற்றுங்கள்" பிரதமர் மோடி வேண்டுகோள்