ஈரான் வழியாக பாகிஸ்தான் நாட்டுக்குள் நுழைந்து உளவு பார்த்ததாக இந்தியக் கடற்படை வீரர் குல்பூஷன் ஜாதவிற்கு, பாகிஸ்தான் நீதிமன்றம் 2017ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்புக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் இந்திய அரசு வழக்குத் தொடர்ந்தது. இதனிடையே, இவ்வழக்கின் தீர்ப்பு வரும்வரை குல்பூஷன் ஜாதவுக்கு தண்டனை அளிக்கக் கூடாது என அதே ஆண்டு மே மாதம் சர்வதேச நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்தது.
தொடர்ந்து சுமார் இரண்டு வருடங்களாக நடைபெற்றுவந்த இந்த வழக்கில், சர்வதேச நீதிமன்றம் ஜூன் 21 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.
இந்தத் தீர்ப்பில், குல்பூஷனுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு தடைவிதித்தும், தண்டனையைப் பாகிஸ்தான் மறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், குல்பூஷன் ஜாதவுக்கு தூதரக அனுமதி அளிக்கவேண்டும் எனவும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
அந்த வகையில், சிறையில் உள்ள குல்பூஷன் ஜாதவுக்கு, வியன்னா ஒப்பந்தத்தின் அடிப்படையில் நாளை தூதரக அனுமதி வழங்கப்படும் என பாகிஸ்தான் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.