டெல்லி: சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ இன்று (மார்ச் 24) மாலை இந்தியா வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசர் அஜித் தோவல் ஆகியோரை சந்தித்து நாளை (மார்ச் 25) பேசவுள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் சந்திப்பின் போது, ரஷ்யா-உக்ரைன் போர், இந்தியா - சீனா எல்லைப் பிரச்சனை உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2020ஆம் ஆண்டு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவம் ஊடுருவி, இரு நாடுகளுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இந்த மோதல் சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தைதொடர்ந்து இந்தியா- சீனா உறவில் விரிசல் ஏற்பட்டது.
இந்த சம்வத்திற்கு பிறகு, சீனாவின் உயர்மட்ட துறை அலுவலர் இந்தியா வருவது இதுவே முதல் முறையாகும். இருப்பினும் பிரதமர் நரேந்திர மோடி, வாங் யீயின் சந்திப்பு குறித்து தகவல் இல்லை.
சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீன் இந்தியா வருகை குறித்து இந்திய வெளியுறவுத் துறை உறுதிபடுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், நேற்று (மார்ச் 23) டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, "சீன வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியா வருகை குறித்து எங்களுக்கு தகவல் ஏதும் வரவில்லை. பெய்ஜிங்கும் இந்த தகவலை உறுதிப்படுத்தவில்லை" என்றார்.
முன்னதாக, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடந்த மாநாட்டில் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அதில் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் குறித்து பேசியதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை கூறுகையில், சீனா உள்பட பிற நாடுகள் இந்தியாவின் உள் விவகாரங்கள் குறித்து பேச எந்த உரிமையும் இல்லை என்று கூறியுள்ளது.
இதையும் படிங்க: உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்சி லஹோட்டி காலமானார்!