சீனாவின் வூஹான் நகரில் முதல்முதலாக பரவ தொடங்கிய கரோனா தொற்று, உலக முழுவதும் தனது ருத்ர தாண்டவத்தை காட்டி வருகிறது. பல நாடுகள் கரோனா தொற்றிலிருந்து மீளமுடியாமல் தவித்து வரும் நிலையில், சீனா கரோனாவை கட்டுபடுத்திவிட்டதாக கூறப்பட்டது. ஆனால், தற்போது புதிதாக நூற்றுக்கணக்கான நபர்களுக்கு அறிகுறி இல்லாத கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளதாக சீன சுகாதார துறை அறிவித்துள்ளது.
கிடைத்த தகவலின்படி, காஷ்கர் பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமிக்கு முதலில் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, அச்சிறுமி பணிபுரியும் தொழிற்சாலை மற்றும் அவருடன் தொடர்பில் இருக்கும் நபர்களிடம் சீனா சுகாதார துறையினர் நடத்திய கரோனா பரிசோதனையில், சுமார் 137 பேருக்கு அறிகுறி இல்லாத கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. சிறுமி மூலம் நூற்றுக்கணக்கான நபர்களுக்கு கரோனா பரவியுள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் மூலம் வேறு யாருக்கும் கரோனா பரவியுள்ளதா என்பதும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. முதற்கட்ட பரிசோதனையில், தொழிற்சாலையில் பணியாற்றும் 831 ஊழியர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு இல்லை எனத் தெரியவந்துள்ளது.