கோவிட்-19 தொற்றின் தாக்கம் தற்போது சீனாவில் குறைந்து மெல்லமெல்ல இயல்பு நிலை திரும்பிவருகிறது. இருப்பினும், மற்ற நாடுகளில் தொற்றின் தாக்கம் இன்னும் முழுமையாகக் குறையவில்லை.
இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த பெரும் தொழிலபதிபர்கள் பலரும் உலக நாடுகளுக்கு தங்களால் முடிந்த உதவிகளைச் செய்துவருகின்றர். குறிப்பாக, அலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜாக் மா, அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்திற்கு ஆயிரம் வென்டிலேட்டர்களை அனுப்பிவைத்தார்.
இதுதவிர ஜாக் மாவின் அறக்கட்டளை சார்பில் ஆப்பிரிக்கா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு வென்டிலேட்டர்கள், முகக்கவசங்கள் ஆகியவை அளிக்கப்பட்டுவருகின்றன.
அதேபோல, கோவிட்-19 தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க ஏதுவாக 250 மில்லியன் டாலர்களை வழங்கவுள்ளதாக டிக்டாக் நிறுவனம் அறிவித்துள்ளது.
வி-சாட் (WeChat) செயலியின் தாய் நிறுவனமான டென்சென்ட் நிறுவனம் வளரும் நாடுகளுக்கு உதவ 100 மில்லியன் டாலர்களை வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும், 15 நாடுகளுக்கு முகக்கவசங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களையும் அனுப்பியுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேபோல ஹையர் ஸ்மார்ட் ஹோம் (Haier Smart Home) நிறுவனத்தின் சார்பில் பாகிஸ்தானிலுள்ள மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டுவருகிறது.
உலகெங்கும் கோவிட்-19 தொற்று பரவ சீனாவே காரணம் என்ற கருத்து பரவிவருகிறது. கரோனா காலத்தில் மோசமடைந்த சீனாவின் பெயரை மீட்டெடுக்கும் வகையில், தற்போது பல சீன தொழிலதிபர்கள் மற்ற நாடுகளுக்கு உதவிகளை செய்துவருகின்றனர்.
வழக்கமாக இதுபோன்ற நெருக்கடி காலத்தில் அமெரிக்க தொழிலதிபர்கள் மட்டுமே வளரும் நாடுகளுக்கு உதவிகளை அறிவிப்பார்கள். இம்முறை, அமெரிக்க தொழிலதிபர்களுடன் சீன தொழிலதிபர்களும் இணைந்து உதவிகளை அறிவித்துவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திறந்த மனம், பொறுமையின்மை, நம்பிக்கையுடன் இருங்கள்: சுந்தர் பிச்சை