உலக அரங்கில் தனிமைப்பட்டு நிற்கிறதா சீனா? ஏன்? இந்த நிலைமைக்கு காரணம் யார்?
அனைத்து பிராந்தியங்களிலும் கண்டங்களிலும் தடம் பதித்து வல்லரசாக வளர்ந்துவரும் சீனாவின் அச்சமூட்டும் ஆதிக்கம் மற்றும் செல்வாக்குடன், பொருளாதார அடிமைத்தளையின் மூலம் உலகைத் தன் கட்டுக்குள் கொண்டுவரும் லட்சியத்துடன் அது செயல்படுவது இந்த நம்பிக்கையின்மைக்கு மிக முக்கியமான காரணங்களாகும். இதனால், மேலோட்டமாக பார்க்கும்போது பெருந்தன்மையாகத் தோன்றும் சீனாவின் சர்வதேச நிதியுதவிக் கொள்கை, பொருளாதார மேம்பாடு மற்றும் அதன் பகாசுர உள்கட்டமைப்பு திட்டங்கள் அனைத்தும் உள்நோக்கம் கொண்டவை என ஒருமித்த கருத்து சர்வதேச அளவில் மேலோங்கியுள்ளது. இவையெல்லாம் சீனாவின் இராணுவ, பாதுகாப்பு மற்றும் புவி-அரசியல் நலன் சார்ந்தவை என்ற கருத்து புறந்தள்ள முடியாத அளவுக்கு உலக நாடுகளிடையே வலுப்பெற்றுள்ளது. குறிப்பாக, செஞ்சீனத்தின் ‘ஒரே இணைப்பு-ஒரே பாதை’ (OBOR) அல்லது ‘ஒரே மண்டலம்-ஒரே சாலை’ (BRI) திட்டமும் அதன் பக்கவிளைவாக பல நாடுகள் சீனாவின் கடன் வலையில் சிக்குண்டு இருப்பதும், சந்தேகக் கண்கொண்டு பார்க்கப்படுகின்றன.
மேலும், பெருமளவில் அதிகரித்துவரும் சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறையும், பன்னாட்டு கம்பெனிகள் மற்றும் சர்வதேச நிறுவனஙகளில் தனது ஆதிக்கத்தை பெய்ஜிங் திட்டமிட்டு நிலை நாட்டிவருவதும் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட முன்னணி நாடுகளின் கவனத்தில் இல்லாமல் இல்லை. அண்மைக்காலத்தில், சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளும் கவலைதரும் வகையில் உள்ளன. பிரச்சனைக்குரிய தென் சீனக் கடலில், சீனாவின் வல்லாதிக்க ஆக்கிரமிப்பு சுதந்திரமான கடல் மற்றும் வான்வழிப் போக்குவரத்திற்கு ஆபத்தானதென பல நாடுகளால் கருதப்படுகிறது. காரணம், இந்த பிராந்தியத்தின் வழியாகத்தான், பில்லியன் டாலர் கணக்கான சர்வதேச வர்த்தகம் நடைபெறுகிறது.
கோவிட்-19 பெருந்தொற்று உருவான விதமும் அது உலகின் மூலை முடுக்கெல்லாம் முழுமையாக வியாபித்ததும், இந்த பேரவலத்தை தனக்கு சாதகமாக சீனா பயன்படுத்திக்கொள்ள மேற்கொள்ளும் முயற்சிகளும், தொடர் நடவடிக்கைகளும், உலக அரங்கில் அந்நாட்டின் பெருமையை, புகழை மேலும் சிதைக்கும் வண்ணம் அமைந்துள்ளது. அத்துடன், சீனாவின் இத்தகைய செயல்பாடுகள் சர்வதேச சமூகத்தையும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கச் சொல்கிறது. இது எவ்வாறென்று கீழே விரிவாகப் பார்ப்போம்.
கரோனா வைரஸ் பரவல், திட்டமிட்ட சீன அரசின் சதி, வூகான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டு, உலகின் பிற தேசங்களை வலுவிழக்க வைக்கும் நோக்கத்துடன் பரப்பப்பட்டது என்ற கருத்தாக்கம் குறிப்பாக அமெரிக்காவில் வலுவாகவும், சர்வதேச சமூகத்தில் பரவலாகவும் பேசப்படுகிறது. இந்நிலையில், உலகம் எதிர்கொண்டுள்ள பெருந்தொற்றுப் பரவல் குறித்து உரிய நேரத்தில் எச்சரிக்கத் தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டு அந்நாட்டின் மீது உள்ளது.
சீனாவின் பொறுப்பற்ற தாமதம், பல்லாயிரம் உயிர்களைக் காவு கொண்டதுடன், உலக பொருளாதாரத்தை அதள பாதாளத்திற்கு இட்டுச் சென்றுள்ளது. இதுமட்டுமின்றி, உலக சுகாதார நிறுவனத்தை (WHO) தனது கைப்பாவையாக ஆட்டுவித்து தனக்கு சாதகமாக செயல்பட வைத்த குற்றச்சாட்டும் சீனா மீது எழுந்துள்ளது. உலக சுகாதார நிறுவன தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதாநாம் கெப்ரெயேசுஸ், சீனாவின் தவறுகளை மூடி மறைத்து, வைரஸ் பரவல் குறித்த சீனாவின் கருத்தை ஆதரித்து, அந்நாட்டின் தடுப்பு நடவடிக்கைகளை பாராட்டியும் உள்ளார். இவர், சீன ஆதரவுடன், 2017-ஆம் ஆண்டு மே மாதம் இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவை ஒருபுறம் இருக்க, இந்த ரணகளத்திலும் கோவிட்-19 பெருந்தொற்றை முன் வைத்து பெருமளவில் லாபம் ஈட்டும் சீனாவின் செயல்பாடுகள், முன்னமே சீரழிந்திருக்கும் சீனாவின் பிம்பத்தை மேலும் கிழித்து தொங்கவிட்டுள்ளது. சீனாவில் கரோனா தன் வெறியாட்டத்தை தொடங்கியபோது, டன் கணக்கான கோவிட் தற்காப்பு உபகரணங்களை இத்தாலி இலவசமாக வழங்கியது. ஆனால், பின்னர் இத்தாலியில் கோவிட்-19 சுற்றிச் சுழன்றடித்து அந்த நாட்டை சூறையாடியபோது, தான் இலவசமாகப் பெற்ற அதே உபகரணங்களை, இத்தாலிக்கு சீனா விற்றதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இது உண்மையென்றால், இதனைவிட கேவலம் எதுவும் இருக்க முடியாது. இது மட்டுமா? தரம் குறைந்த மருத்துவ கருவிகளையும் உபகரணங்களையும் பிற நாடுகளுக்கு விற்று விரைவான லாபம் ஈட்ட சீனா முயல்வது பற்றியும் தகவல் வெளிவந்துள்ளது.
தரமற்ற 50,000 துரித பரிசோதனைக் கருவிகளை சீனாவுக்கே, ஸ்பெயின் திருப்பி அனுப்பியதாக செய்திகள் வெளியாகின. கரோனாவின் கோரப்பிடியில் உள்ள ஸ்பெயின் மட்டுமல்ல, மற்றொரு ஐரோப்பிய நாடான நெதர்லாந்தும் மருத்துவ தரமற்ற சீன உபகரணங்களை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது. இவை, சர்வதேச அரங்கில் சீனாவுக்கு பெரும் பின்னடைவைத் தரும் என்பதில் சந்தேகமில்லை. இவற்றையெல்லம் விட, உலகளவில் சரிந்துவரும் சர்வதேச பங்கு வர்த்தகத்தில் சீனா களமிறங்கி, தனது வேட்டைக்காடாக பங்குச் சந்தையை மாற்றிவிடும் அபாயம் பேரச்சமாக உள்ளது.
உலக பொருளாதார வீழ்ச்சியை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி, சீனா, அயல் நாட்டில் உள்ள பெரு நிறுவன பங்குகளையும், வெளிநாட்டு சொத்துகளையும் வாங்கிக் குவிப்பது நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கவலை தற்போது தலைதூக்கியுள்ளது. பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு, அமெரிக்காவும் சில ஐரோப்பிய நாடுகளும், தொழில்நுட்ப நிறுவனங்களை சீனாவுக்கு விற்பதற்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டுவருகின்றன. இந்நிலையில், கரோனா பெருந்தொற்றுக்குப் பின் சில நாடுகள், தங்கள் நலனைப் பாதுகாக்க வேண்டி சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி போன்ற நாடுகள் அந்நிய முதலீடுகளை, குறிப்பாக சீன மற்றும் சீன சார்பு முதலீடுகளைக் கண்காணிக்க கூடுதல் வழிமுறைகளை, நெறிமுறைகளை செயல்படுத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளில், சீனாவுக்கான நெருக்கடிகள் புதிய உத்வேகம் கொண்டுள்ளன, சீனாவைப் பற்றிய விமர்சன பார்வையும் எழுந்துள்ளது. கரோன பரவல் குறித்த சீனாவின் செயல்பாடுகள் குறித்து காத்திரமான விசாரனை தேவை என வலுவான கோரிக்கை மேற்கத்திய சமூகங்களில் பரவலாக எழுந்துள்ளன. மேலும், வைரஸ் தொற்றையும் அதன் தீவிரத்தையும் மறைத்து குறைத்து மதிப்பிட்ட குற்றத்திற்காக ட்ரில்லியன் டாலர்கள் நஷ்டஈடு கோரி அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும், சீனா மீது வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில், உலக சுகாதார நிறுவனம் மீது அமெரிக்கா மேற்கொண்டுள்ள நடவடிக்கை தேவையற்றதாகும். பெருந்தொற்று பேரபாயம் நீடிக்கும் வேளையில், உலக சுகாதார நிறுவனத்திற்கான நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது ஏற்புடையதல்ல.
இந்த சூழ்நிலையில், இந்தியாவின் செயல்பாடும் எதிர்வினையும் எத்தகையதாக உள்ளது என்று பார்ப்போம். சீனாவுக்கு எதிரான சர்வதேச உணர்வுகளை, எண்ணத்தைப் பிரதிபலிக்கும் விதமாக எந்த ஒரு அதிகாரபூர்வ அறிக்கையையும் வெளியிடாது இந்தியா தவிர்த்துள்ளது. அண்டை நாடான சீனாவை, நேரடியாக பகைத்துக் கொள்ள இந்தியா தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது.
மேலும், உலக சுகாதார நிறுவனத்தை நேரடியாக விமர்சிப்பதையும் தவிர்த்துள்ளது. மாறாக, (ஜி-20 இணைய மாநாட்டில்) உலக சுகாதார நிறுவனத்தை மறுசீரமைக்கவும் வலுப்படுத்தவும் இந்தியா வலியுறுத்தியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியாவின் செயல்பாடு இரண்டுவித நோக்கங்களை முதன்மையாகக் கொண்டுள்ளது. இந்தியாவில் கரோனா பரவல் மூன்றாம் கட்டத்திற்கு (சமூகப் பரவலுக்கு) செல்லாமல் தடுப்பது முதலாவதாகும். அடுத்ததாக, கரோனாவுக்கு எதிரான ஒருங்கிணைந்த சர்வதேச நடவடிக்கைகளை மேற்கொள்வது.
கரோனா பரவலைத் தடுக்க ஏழை மற்றும் தேவையை எதிர் நோக்கும் நாடுகளுக்கு உதவும் வண்ணம் பன்னாட்டு நிதி உருவாக்குவது, தகவல் பரிமாற்றம் மற்றும் இந்த பெருந்தொற்று தடுப்பு மருந்து ஆய்வைத் விரைந்து துரிதப்படுத்துவது ஆகியவற்றில் இந்தியா தன் முழுமையான கவனத்தை ஆக்கபூர்வமான முறையில் செலுத்திவருகிறது. பன்னாட்டு அரங்கில் இந்தியாவின் செயல்பாடு இவ்வாறு இருக்க, வர்த்தகம் மற்றும் அன்னிய முதலீடு ஆகிய முக்கிய துறைகளில் இரண்டுவிதமான. ஆனால் நடைமுறை சாத்தியமான, அனுகுமுறையை கைக்கொண்டுள்ளது.
கரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்குத் தேவையான மருத்துவக் கருவிகளைத் தருவிப்பதில் உலகளவில் தேடல் உள்ள சூழலில், உடனடி தேவைக்கான அத்தியாவசியமான உபகரணங்களை சீனாவிடம் இருந்து தொடர்ந்து வாங்குகிறது. அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி, ஊடகங்களில் வெளிவந்த செய்திகளின்படி, ஏப்ரல் 4 முதல் 19 வரை, 390 டன்னுக்கும் அதிகமான மருத்துவ கருவிகளும் பொருட்களும் சீனாவில் இருந்து விமானம் மூலம் இந்தியா வந்தடைந்தன. இவற்றுள், கரோனா பரிசோதனைக்கான இன்றியமையாத RT-PCR கருவிகள், துரித பரிசோதனை கருவிகள், பாதுகாப்பு உடைகள் மற்றும் தெர்மாமீட்டர் ஆகியவை அடங்கும்.
இவ்வாறான சூழலில், இந்தியா மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுகிறது. சரிவில் உள்ள இந்திய பங்குச்சந்தை, சீனாவின் வேட்டைக்காடாக மாறிவிடக்கூடாது என்பதில் கவனமுடன் உள்ள இந்தியா, அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையிலும் இறங்கியுள்ளது. உதாரணமாக, மத்திய அரசு அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையை ஏப்ரல் 18 அன்று திருத்தி அறிவித்தது. இதன்படி, இந்தியாவுடன் எல்லைகள் கொண்ட அதன் அண்டை நாடுகளில் இருந்து வரும் முதலீடுகள் அனைத்தும் அரசின் வழியாகவே அனுமதி பெற்றாக வேண்டும். அரசின் கண்காணிப்பின்றி, அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவில் முதலீடு செய்ய இயலாது என்ற நடைமுறை செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த புதிய நடைமுறை, குறிப்பாக சீனாவைக் கட்டுபடுத்தவே கொண்டுவரப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பால் தேவையான நிதி ஆதாரம் இன்றி தடுமாறும் இந்திய நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கவோ அவற்றில் முதலீடு செய்யவோ இயலாத வகையில் சீனாவுக்கு கடிவாளம் போடுகிறது இந்த புதிய நடைமுறை. இந்த அறிவிப்பு வெளிவந்த சூழலும் எவ்வளவு முக்கியமானது, தகுந்த காலத்தில் தாமதமின்றி எடுக்கப்பட்டது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
இந்தியாவின் மிகப் பெரிய வீட்டு வசதி நிதி நிறுவனமான ஹெச்.டி.எஃப்.சி லிட். பங்குச் சந்தையில் மிகப் பெரும் சரிவைச் சந்தித்த நிலையில், அதன் 17.5 மில்லியன் பங்குகளை சீனாவின் மத்திய வங்கி வாங்கியது, எச்சரிக்கை மணியை ஒலித்தது. இந்தியா விழித்துக்கொண்டது. இதனை அடுத்து, புதிய அன்னிய நேரடி முதலீடு நெறிமுறைகள் கொண்டுவரப்பட்டது. எதிர்பார்த்ததுபோல, சீனாவிடம் இருந்து எதிர்ப்பு வராமல் இல்லை. உலக வர்த்தக அமைப்பு மற்றும் பிற பன்னாட்டு ஒப்பந்தங்களுக்கு இது எதிரானது என்ற சீனாவின் குற்றச்சாட்டை இந்தியா புறந்தள்ளிவிட்டது.
புதிய வழிகாட்டு நெறிமுறைகள், அன்னிய முதலீட்டுக்கான முறையில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளதே தவிர, குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வரும் முதலீடுகளைத் தடுக்கவில்லை என்று தெளிவாக விளக்கம் அளித்து தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது இந்தியா. சீனாவின் அதிருப்தியும் கோபமும் நியாயமானதா? இந்தியாமீது குற்றம்சாட்டும் சீனாவும், இந்தகைய கட்டுப்பாடுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்திய நிறுவனங்கள், சீனாவின் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய நிறைய கட்டுப்பாடுகள் இன்றளவும் நடைமுறையில் உண்டு. குறிப்பாக, மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப கம்பெனிகளில் இந்திய நிறுவனங்கள் நேரடியாக முதலீடு செய்வதற்கு தடைகற்கள் அனேகம் உண்டு. தனக்கு ஒரு நியாயம் அடுத்தவருக்கு ஒரு நியாயமா!
கரோனா பெருந்தொற்று உலக அளவில் ஏற்படுத்தியுள்ள பேரபாயம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதனால், ஏற்படவுள்ள பேரழிவும் அதன் தீவிரமும் தாக்கமும் எத்தகையது என்று இப்போதைக்கு அறுதியிட்டுக் கூறமுடியாது. மனித உயிர்களுக்கும், உலக பொருளாதாரத்திற்கும், மக்கள் சமூகங்களுக்கும் என்ன விதமான பாதிப்புகள் நேர உள்ளது என்பது வரலாற்றில் முன்னெப்போதும் கண்டிராத ஒன்றாக இருக்கலாம். ஆனால், ஒன்று, கோவிட்-19 திட்டமிடப்பட்ட சதியா அல்லது தற்செயல் நிகழ்வா என்பதை நாம் அறிய இன்னும் வெகு காலமாகலாம். ஏன் தெரியாமலே கூட போகலாம். மேலும், இது உலக சுகாதார நிறுவனத்தின் தவறா, அதன் அமைப்பு முறையில் உள்ள குறையா அல்லது அதன் தலைவர், சீனாவுக்கு சாதகமாகச் செயல்பட்டு செஞ்சோற்றுக் கடன் கழித்தாரா? விடை தேடும் இந்த கேள்விகள் தொடரும்.
இருப்பினும், இந்த சமயத்தில் மிகத் தெளிவாகத் தெரிவது ஒன்று மட்டுமே. தீவிரமாகியுள்ள கரோனா நெருக்கடி, சர்வதேச சமூகத்திற்கு சீனா மீதான அவநம்பிக்கையை, சந்தேகப் பார்வையை ஆழப்படுத்தியுள்ளது. மேலும், கண்மூடித்தனமான தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் என்பதற்கும் தனிபட்ட நாடுகள், தங்களின் தேச பாதுகாப்பிற்கும் உள்ள வேறுபாட்டை தெளிவாகப் புரிந்துகொள்ளவெண்டிய தேவையை இனியும் புறந்தள்ளி ஒதுக்கிவிட முடியாது.
கரோனா வெறியாட்டம் முடிவுக்கு வந்தாலும், சர்வதேச அரங்கில் சீனாவின் நிலை எத்தகையாதாக இருக்கும் என்ற கேள்வி அனைவரிடமும் இயல்பாக எழுவதை தவிர்க்க இயலாது. பழைய நிலைமை புரட்டிப்போடப்பட்டுள்ள சூழலில், வழக்கம்போல அனைத்து நாடுகளுடன் சுமுகமான உறவு நிலவுமா அல்லது உலகம் சீனாவுடன் ‘சமூக விலகலை’ கடைபிடிக்குமா? காலம்தான் பதில் சொல்லும்.