இந்திய - சீன ராணுவத்திற்கிடையே கவ்லான் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து சீன பொருள்களை புறக்கணிக்க வேண்டும் என்ற மனநிலை அதிகரித்துவருகிறது.
அதேபோல, மத்திய அரசும் சீன நிறுவனங்களுடன் இணைந்து பணிபுரிய வேண்டாம் என்றும் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் டெண்டர்களை வெளிட வேண்டும் என்றும் அரசு துறைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய சீன வர்த்தக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் காவ் ஃபெங், சீன பொருள்களுக்கும் நிறுவனங்களுக்குக்கும் எதிராக இந்தியா பாகுபாடுகளை காட்டுவதாக குற்றம்சாட்டினார்.
மேலும், சீன நிறுவனங்களுக்கு எதிராக காட்டப்படும் பாரபட்சமான நடவடிக்கைகளை உடனடியாக இந்தியா சரிசெய்யும் என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
இரு நாடுகளும் இறக்குமதிக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளதா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "இதுவரை இந்திய பொருள்களுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையையும் சீனா எடுக்கவில்லை" என்று காவ் ஃபெங் தெரிவித்தார்.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் எல்லையில் ஏற்பட்ட பதற்றம் குறைவதற்கு முன், தனியுரிமை மற்றும் பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய செய்தித்தாள்களுக்கும் ஊடக வலைதளங்களும் சீனா தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மத்திய அரசின் தடையிலிருந்து பப்ஜி கேம் எப்படி தப்பியது?