கோவிட்-19 வைரஸ் தொற்று கடந்தாண்டு இறுதியில் சீனாவில் பரவத்தொடங்கியது. சீனாவில் இந்த வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்துவிட்டபோதும் பிற நாடுகளில் இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் தற்போதுதான் அதிகரித்துவருகிறது.
சீனாவின் நட்பு நாடான பாகிஸ்தானில் இதுவரை 1,420 பேருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 12 பேர் உயிரிழந்தனர். கோவிட்-19 வைரஸ் தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான ஈரானின் அண்டை நாடாக இருப்பதால் வைரஸ் தொற்று மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
மேலும், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் தவறிவிட்டனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. உலக அளவில் வைரஸ் மிக வேகமாகப் பரவியபோதும், லாக்கூரில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற மாநாட்டுக்கு அனுமதியளிக்கப்பட்டது. அந்த மாநாட்டில் பங்கேற்ற சிலருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது அந்நாட்டு மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானில் கோவிட் - 19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த உதவ மருத்துவ பணியாளர்களையும் மருத்துவ உபகரணங்களையும் தனி விமானம் மூலம் சீனா அனுப்பியுள்ளது.
வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துவரும்போதும் நாட்டிலுள்ள ஏழைகள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறி தற்போதுவரை ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் மறுத்துவருகிறார். இருப்பினும் உணவங்கள், திருமண மண்டபகங்கள் உள்ளிட்ட தேவையற்றவையை மூட உத்தரவு அவர் பிறப்பித்துள்ளார்.
மேலும், வெள்ளிக்கிழமை பிரார்த்தனைகளுக்கு அடுத்த சில வாரங்களுக்கு ஒன்றுகூட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: கரோனாவிலிருந்து மீண்டுவந்த 101 வயது முதியவர்!