பெய்ஜிங்: கரோனா தொற்றின் இரண்டாம் அலை குறைந்துவரும் நிலையில், உலகம் முழுவதும் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்பி வந்தது. இதனிடையே கரோனா உருமாற்றம் அடைந்து டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் என்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
தென் ஆப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட ஒமைக்ரான், வெறும் இரண்டு வாரத்தில் 100 நாடுகளுக்கும் மேல் பரவிவிட்டது. இந்தியாவில் கடந்த வாரத்தில் 30 பேருக்கு மட்டுமே உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த வாரத்தில் 236 பேருக்கு உறுதியாகி உள்ளது. மகாராஷ்டிரா, தெலங்கானா, டெல்லி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
மீண்டும் கரோனா
ஒமைக்ரான் ஒருபுறமிருக்க, கரோனா தொற்று பல்வேறு நாடுகளில் மீண்டும் அதிகரித்துவருகிறது. அந்த வகையில், சீனாவின் சிய்யான் நகரில் ஒரே நாளில் 52 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அனைவரும் உள்ளூர் மக்கள். யாரும் வெளிநாடுகளுக்கு செல்லாதவர்கள் என்பதால், சிய்யான் நகரில் காலவறையற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிய்யான் அரசு கூறுகையில், கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வீடுகளை விட்டு வெளியேர வேண்டும். அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மறு அறிவிப்பு வரும் வரை ஊரடங்கு அமலில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளது. சிய்யான் நகரில் மொத்தம் 1.3 கோடி மக்கள் வசிக்கின்றனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 34 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு