கரோனா பாதிப்பு இந்தியாவில் கடந்த ஒரு வாரத்தில் வேகமாக அதிகரித்துவருகிறது. நாடு முழுவதும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை லாக் டவுன் என்ற முழு அடங்கு அமலில் உள்ளது. வைரஸ் பாதித்தவர்களின் சிகிச்சைக்காகப் பல்வேறு கூடுதல் மருத்துவ ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்றுவருகின்றன. முகக்கவசம், கிருமி நாசினி, வென்ட்டிலேட்டர் உள்ளிட்ட உபகரணங்கள் தேவைக்காக உற்பத்திசெய்யப்பட்டு இறக்குமதியும் செய்யப்படுகிறது.
இந்நிலையில், கரோனா வைரஸ் பாதிப்பை இந்தியா எதிர்கொள்வதற்குத் தங்களால் இயன்ற உதவியை சீனா நிச்சயம் மேற்கொள்ளும் என அந்நாட்டு அரசு உறுதியளித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் கரோனா பாதிப்பைத் தடுக்க சீனா போராடியபோது இந்தியா சார்பில் சுமார் 15 டன் அளவிற்கான மருத்துவ உதவிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதை நினைவுகூர்ந்த சீனா, கரோனா பாதிப்பை எதிர்கொள்ள இந்தியா உதவியதுபோல் இன்றைய சூழலில் அந்நாட்டிற்கு நாங்களும் தேவையான உதவிகளை செய்யத் தயாராக இருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளது.
இந்திய மக்கள் இந்தப் போராட்டத்தில் நிச்சயம் வெல்வார்கள் எனவும், ஜி-20, பிரிக்ஸ் ஆகிய அமைப்புகளில் இணைந்து செயல்படும் இரு நாடுகளும் இந்த சர்வதேச சிக்கலைச் சரிசெய்ய ஒன்றாகப் போராடும் எனவும் சீன அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பின் பிறப்பிடமான சீனாவில் இதுவரை 81 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், வைரஸ் பாதிப்பின் காரணமாக மூன்றாயித்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: அமெரிக்க மருத்துவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய இந்திய நிறுவனம்: நெகிழ்ந்துபோன ட்ரம்பின் மகள்