உலக நாடுகள் அனைத்தும் கரோனா வைரஸினைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டிருக்கும் வேளையில், சீனா அண்டை நாடுகளின் நிலங்களை ஆக்கிரமிக்கும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது.
சில நாள்களுக்கு முன்பு, லாடக் பகுதியில் அமைந்துள்ள இந்திய- சீன எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்தி, இந்திய எல்லை பகுதியில் அந்நாட்டு ராணுவத்தினர் ஊடுருவினர். இந்த செயலால் இரு நாடுகளுக்கும் இடையே போர் நிலவும் சூழல் ஏற்பட்ட நிலையில், இருநாட்டு, ராணுவ அலுவலர்களும் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு எட்டியதால், சீனப் படைகள் பின்வாங்கப்பட்டன. இதன் தாக்கமே இன்னும் சீராகாத நிலையில் தற்போது சீனா அண்டை நாடான பூட்டான் நிலப்பகுதிகளை குறிவைத்துள்ளது.
சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் ஒரு செய்தியாளர் கூட்டத்தில், சீனாவுக்கும் பூட்டானுக்கும் இடையிலான எல்லை இன்னும் வரையறுக்கப்படவில்லை. சீனாவின் நிலைப்பாடு சீரானதாகவும் தெளிவாகவும் உள்ளது. சீனாவுக்கும் பூட்டானுக்கும் இடையிலான எல்லை பிரிக்கப்படவில்லை, நடுத்தர, கிழக்கு மற்றும் மேற்கு பிரிவுகளில் சர்ச்சைகள் உள்ளன என்று கூறினார்.
மேலும், இதுதொடர்பான சர்ச்சையைத் தீர்க்க, சீனா, ஒரு தொகுப்பு தீர்வை வழங்குவதாகவும் அவர் கூறினார்.
இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி கவுன்சிலின் (ஜி.இ.எஃப்) காணொலி கூட்டத்தில், இந்தியா மற்றும் சீனாவின் எல்லையிலுள்ள கிழக்கு பூட்டானின் டிராஷிகாங் மாவட்டத்தில் உள்ள சரணாலயத்திற்கான மானியம் வழங்கப்படுவதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், சரணாலயம் அமைந்திருக்கும் பகுதி சர்ச்சைக்குரியது எனவும் கூறியது. சீனாவின் இந்த கருத்துகளை பதிவு செய்துகொண்ட அமைப்பு, சீனாவின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்தது.
இதையடுத்து ஜி.இ.எஃப் அமைப்பிற்கு பூட்டான் அரசாங்கம் ஒரு முறையான கடிதத்தை வெளியிட்டது, அதில், பூட்டானின் இறையாண்மை மற்றும் சாக்டெங் வனவிலங்கு சரணாலயம் குறித்த சீனாவின் கருத்துகளை அவைக்குறிப்பிலிருந்து நீக்கவேண்டும் என வலியுறுத்தியிருந்தது.
1984 ஆம் ஆண்டு முதல் பூட்டான் மற்றும் சீனா எல்லை தகராறு நடைபெற்றுவருவதாகவும், மேற்கு, வடக்கு பூட்டான், ஜகார்லங் மற்றும் பாசம்லுங் ஆகிய பகுதிகள் சர்ச்சைக்குரிய இடமாக உள்ளதாகவும், இவை முன்னதாகவே வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் பூட்டான் தெரிவித்துள்ளது.