இந்தியா - சீனா இடையே எல்லையில் கடந்த மே மாதம் முதல் பிரச்னை நிலவி வருகிறது. இந்திய எல்லைப் பகுதிகளில் சீனா தொடர்ந்து ஊடுருவி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில், இந்தியாவைப் போலவே நேபாளத்திலும் சீனா அத்துமீறியுள்ளதாக குற்றச்சாடுகள் எழுந்துள்ளன. நேபாள நாட்டின் எல்லைக்குட்பட்ட பகுதியில் சீனா அத்துமீறி கட்டுமானங்களை எழுப்பியதாக நேபாள நாட்டின் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து நேபாள நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவரான ஜீவன் பகதூர் ஷாஹி கூறுகையில், "எல்லையில் ஜங் தூண் சமீபத்தில் சீனாவால் அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து நேபாள அரசு அலுவலர்களுக்கு முறையான தகவல் தெரிவிக்கப்படவில்லை.
எல்லையிலுள்ள ஹம்லா மாவட்டத்தில் நமது விவசாயிகளையும் கால்நடை மேய்ப்பவர்களையும் சீனா அனுமதிப்பதில்லை. நேபாளத்தின் எல்லை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன" என்ற பரபரப்பு குற்றச்சாடுகளை எழுப்பினார்.
இருப்பினும், ஜீவன் பகதூர் ஷாஹிவின் இந்தக் குற்றச்சாட்டை நேபாள அரசு முற்றிலுமாக மறுத்திருந்தது. இந்நிலையில், சீனாவின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ், இந்தப் புகாருக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
"நேபாள நாட்டின் எல்லைக்குட்பட்ட பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளதாக சிலர் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால், அந்தக் குறிப்பிட்ட கட்டுமானம், சீன எல்லைக்குட்பட்ட பகுதியிலேயே கட்டப்பட்டுள்ளது. தென்மேற்கு சீனாவின் திபெத் தன்னாட்சி பிராந்தியத்திலுள்ள ஒரு புதிய கிராமத்தில் இந்தக் கட்டடம் எழுப்பப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க : நெருங்கும் பிகார் தேர்தல்; கடும் சவால்களை எதிர்கொள்ளும் நிதிஷ் குமார்!