இந்திய-சீன எல்லையான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் படைகளைத் திரும்பப்பெறும் நடவடிக்கையின்போது இரு தரப்பு ராணுவத்திற்கும் இடையே ஜூன் 15ஆம் தேதி இரவு கடும் மோதல் ஏற்பட்டது. இதில், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 20 வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும், சீனத் தரப்பிலும் சுமார் 20 வீரர்கள் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது.
உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் இந்தியப் பகுதியில், சீனா அமைத்திருந்த கூடாரத்தை நீக்க இந்திய ராணுவம் முயன்றபோது இந்த மோதல் ஏற்பட்டதாக இந்தியா குற்றஞ்சாட்டியது. இருப்பினும், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் சீனப் பகுதியில் அத்துமீறி இந்திய நுழைந்ததே இந்தத் தாக்குதலுக்கு காரணம் என்று சீனா ராணுவம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்நிலையில், செய்தியாளர் சந்திப்பில் பேசிய சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன், ”இந்த மோதல் சீனா பகுதியில்தான் நடந்தது. இந்திய ராணுவம் சீனப் பகுதியில் அத்துமீறி நுழைந்தது.
இந்த மோதலுக்கு சீனா மட்டும் காரணம் அல்ல. இந்திய ராணுவத்தின் நடவடிக்கை இரு நாடுகளுக்குமிடையே இருக்கும் ஒப்பந்தங்களை மீறும் வகையில் இருந்தது. சர்வதேச உறவின் அடிப்படை கூறுகளையே மீறுவதாக இருந்தது.
மோதலைத் தொடர்ந்து இரு தரப்பு ராணுவ உயர் அலுவலர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து பதற்றத்தைத் தணிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க இரு தரப்பும் முன்வந்துள்ளன. இதுகுறித்து எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி எல்லையில் மீண்டும் அமைதியை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்று நம்புகிறோம்" என்றார்.
இதையும் படிங்க: இந்தியாவைத் தொடர்ந்து ஜப்பானுடன் போதும் சீனா!