சீனாவில் வேகமாகப் பரவிவரும் கரோனா வைரஸால் இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் மட்டும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் மிக வேகமாகப் பரவிவருவதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. சீனாவில் மட்டுமில்லாமல் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவியுள்ளது.
இந்த வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோரில் 53 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. 49 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். ஷாங்காய் நகரில்தான் இந்த வைரஸ் காரணமாக முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் சீனாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸுக்கு மருந்து தயாரிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவும், மனிதர்களைக் கொல்லும் வைரஸை தனிமைப்படுத்துவதில் வெற்றியடைந்துள்ளதாகவும் சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மைய விஞ்ஞானி சூ வென்போ தெரிவித்தார்.
முன்னதாக, இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசுகையில், வேகமாகப் பரவிவரும் கரோனா வைரஸால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாகவும் இதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: கரோனா வைரஸ் பாதிப்பு - வனவிலங்கு வர்த்தகத்துக்கு தடை