உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை. தடுப்பூசி விநியோகிக்கும் பணி மும்முரமாக நடைபெற்றுவருகிறது. கரோனா தீநுண்மி தொற்றுக்குத் தடுப்பு மருந்துகள் கண்டுபிடித்தாலும், கரோனா உருமாற்றம் பெற்று அதிதீவிரமாகப் பரவிவருகிறது
இந்நிலையில், கரோனா தொற்றுக்கு எதிராக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மறுசீரமைப்பு புரோட்டீன் சப்யூனிட் தடுப்பூசியை அவசரகாலத்தில் பயன்படுத்த சீன அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் தடுப்பூசியின் முதலாம், இரண்டாம் கட்ட சோதனைகள் 2020 அக்டோபரில் நடைபெற்றது. அதன் முடிவுகளை ஆராய்ந்ததில், இந்தத் தடுப்பூசி பாதுகாப்பு மற்றும் நோயெதிர்ப்புத் திறனை அதிகரிப்பது தெரியவந்தது. எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாதது உறுதியானது.
இந்தத் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனை விரைவில் நடைபெறவுள்ளது. இதில் சீனா, உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான், ஈக்வடார், இந்தோனேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 29 ஆயிரம் பேர் பங்கேற்கப் பதிவுசெய்துள்ளனர்.
இந்தத் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு மட்டுமே உபயோகிக்கச் சீன அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது சீனாவில், அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி கிடைத்த நான்காம் மருந்தாகும். ஏற்கனவே, இந்தத் தடுப்பூசியை உபயோகிக்க உஸ்பெகிஸ்தான் அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பின்விளைவுகளை ஏற்படுத்துகிறதா அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி...பயன்பாட்டுக்கு தடைவிதிக்கும் ஐரோப்பிய நாடுகள்!