அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கறுப்பினத்தவர் காவல் துறை பிடியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அந்நாட்டையே உலுக்கி வருகிறது. அந்நாட்டின் பெருநகரங்கள் போராட்டக்களமாக மாறியுள்ளன.
இந்தச் சூழலில், தென் அமெரிக்க நாடான பிரேசிலில் இதே போன்று நிறவெறி வன்முறைக்கு எதிராகப் போராட்டம் வெடித்துள்ளது.
ரியோ டீ ஜெனிரோ நகர் அருகே சாவோ கொன்காலோ என்ற புறநகர்ப் பகுதியில் நேற்று ஒன்றுகூடிய 200-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள், கறுப்பின மக்களுக்கு எதிராகப் பிரேசில் காவல் துறையினர் கட்டவிழ்த்து வரும் வன்முறைகளை நிறுத்திக்கொள்ளுமாறு வலியுறுத்தினர்.
பெரும்பாலும் கறுப்பின மாணவர்களே இந்தப் போராட்டத்தில் காணப்பட்டனர். "Black Lives Matters" என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு வீதிகளில் பேரணியாகச் சென்றனர்.
சமீபத்தில், பிரேசில் காவல் துறையினர் மேற்கொண்ட அதிரடி சோதனையின் போது, ஜாவோ பெத்ரோ என்ற 14 வயது சிறுவனை சுட்டுக்கொன்றனர். இதுபோன்று பல்வேறு கறுப்பினரை காரணமின்றி பிரேசில் காவல் துறையினர் சுட்டுக்கொல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதையும் படிங்க : கேரளாவில் யானையோடு பழகும் குழந்தையின் வைரல் வீடியோ