பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் டர்பட் என்னும் இடத்தில் உள்ள ஒரு கடையின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென வெடித்தது. இந்த விபத்தில், ஒருவர் உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த எட்டு பேர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.
இந்த வெடிகுண்டு விபத்தில் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த பல வாகனங்கள் சேதமடைந்தன. இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்தனர்.
பின்னர், அங்கு ஏற்பட்டிருந்த தீ விபத்தை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய காவல் துறையினர், வெடித்து சிதறிய இருசக்கர வாகனத்தில் சமூக விரோதிகள் சிலர் வெடிகுண்டு வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, இருசக்கர வாகனத்தில் வெடிகுண்டு வைத்தது யார் என்பது குறித்தும், என்ன காரணத்திற்காக வெடிகுண்டு வைக்கப்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடத்திவருகின்றனர்.