கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி, மியான்மரில் ஜனநாயகரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்த்து ராணுவம் ஆட்சியைப் பிடித்தது. அதனைத் தொடர்ந்து, ராணுவ ஆட்சிக்கு எதிராக அங்கு புரட்சி வெடித்தது. தொடர்ந்து, பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் எனப் பல்வேறு தரப்பினரும் அறவழியில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், அவர்களை ஒடுக்கும்விதமாக அந்நாட்டு ராணுவம் மக்களை தொடர்ந்து கொன்று குவித்து வருகிறது. அந்த வகையில், ராணுவ அடக்குமுறையால் முன்னதாக உயிரிழந்த மாணவர் ஒருவரின் இறுதிச் சடங்கில் நேற்று முன் தினம் (மார்ச்.27) கலந்துகொண்ட நபர்கள் மீது ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், குறைந்தபட்சம் 114 பேர் கொல்லப்பட்டுள்ளனர் எனும் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கொல்லப்பட்டவர்களுள் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களும் அடக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அந்நாட்டு ஊடகங்கள் உறுதிபடுத்தியுள்ளன.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் நேற்று (மார்ச்.28) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்டபோது “இது மிகவும் மோசமான சம்பவம், முற்றிலும் மூர்க்கத்தனமானது. எனக்கு கிடைத்த செய்திகளின் அடிப்படையில், ஏராளமான மக்கள் தேவையில்லாமல் கொல்லப்பட்டுள்ளனர்” என்றார்.
முன்னதாக ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, கிரீஸ், இத்தாலி, ஜப்பான், டென்மார்க், நெதர்லாந்து, நியூசிலாந்து, தென் கொரியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்புத் தலைவர்கள் இணைந்து கூட்டறிக்கை ஒன்றில் மியான்மர் ராணுவத்தின் வன்முறைச் செயலுக்கு கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தொடரும் மியான்மர் ராணுவத்தின் வெறியாட்டம்: 114 பேர் சுட்டுகொலை, வலுக்கும் கண்டனக் குரல்கள்!