இன்று உலகளவில் பல அச்சுறுத்தல்களையும், உயிரிழப்புகளையும், பொருளாதார இழப்புகளையும் ஏற்படுத்திவரும் கரோனா வைரஸ் சீனாவின் வூகான் மாகாணத்தில் உருவானது. இந்த வைரஸ் சீனாவிலும் பல்வேறு இழப்புகளை ஏற்படுத்தியிருப்பினும், துரிதமான நடவடிக்கைகளால் அங்கு வைரஸ் தாக்கம் படிப்படியாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து, கடந்த இரண்டு மாதங்களாக சீனாவில் வைரஸ் தொற்று பாதிப்பு முழுவதுமாக குறைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஐம்பது நாள்களுக்குப் பின், சீனத் தலைநகரான பெய்ஜிங்கில் புதிதாக ஏழு பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் கடந்த வியாழக்கிழமை கரோனாவால் மீண்டும் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதற்கு அடுத்தநாளே மேலும், கரோனாவால் ஆறு பேர் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து விசாரணையின்போது, அவர்கள் பெய்ஜிங் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், அதில் ஒருவர் ஷின்பாடி மொத்த சந்தையில் பணிபுரிந்துவந்ததும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, நான்காயிரம் விற்பனையாளர்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய மொத்த உணவு விற்பனைச் சந்தையான ஷின்பாடி மூடப்பட்டது. சந்தையில் பணிபுரிந்துவந்த அனைவருக்கும் கரோனா தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஷின்பாடி சந்தைக்கு அருகில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அந்தக் குடியிருப்புகளும் சீல் வைக்கப்பட்டன.
வைரஸ் கட்டுக்குள் வந்ததையடுத்து, வரும் திங்கள் கிழமையிலிருந்து பள்ளிகள் திறக்கப்படவிருந்த நிலையில், மீண்டும் கரோனா பாதிப்பு ஏற்படத் தொடங்கியுள்ளதால் பள்ளிகள் திறப்பது தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.