கோவிட்-19 தொற்று சீனாவின் வூஹான் நகரில், கடந்த ஆண்டு இறுதியில் முதன்முதலாகக் கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து சீனாவின் பல பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சீன அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டு, சீனா தற்போது மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் மீண்டும் கரோனா தொற்றுப் பரவல் ஏற்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலானோர், அப்பகுதியிலுள்ள ஷின்ஃபாடி சந்தையுடன் தொடர்புடையவர்கள் என அந்நாட்டின் சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஷின்ஃபாடி சந்தைக்கு கடந்த ஆறு நாள்களாக சென்று வந்த 70 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள, அந்நகர நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும், நகரிலுள்ள கல்வி நிலையங்களுக்கு மறு அறிவிப்பு வரும் வரை மாணவர்கள் மீண்டும் திரும்ப வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் பெய்ஜிங்கில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்திருப்பதால், அந்நகரை ’no-go zone’ ஆக சீனாவின் மற்ற மாநகர நிர்வாகங்கள் அறிவித்துள்ளன. பொது மக்கள் தேவையின்றி பெய்ஜிங் நகருக்கு செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பெய்ஜிங்கிலுள்ள இரண்டு விமான நிலையங்களில் சுமார் 70 விழுக்காடு, அதாவது ஆயிரத்து 255 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. முன் பதிவு செய்யப்பட்ட விமான டிக்கெட்டுகளுக்கான பணம் திருப்பி அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெய்ஜிங் நகருக்கு செல்லும் ரயில்களில் முன் பதிவு செய்த பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ரயில்வேத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் தற்போது வரை 83,265 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 78,379 பேர் சிகிச்சைப் பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 252 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை சீனாவில் 4,634 பேர் கரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: இந்தியாவில் ரூ.5 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் சீனா!