வங்கதேசத்தில் கமிலா என்ற பகுதியில் உள்ள இந்து கோயிலில் தசரா பண்டிகையின் ஒரு பகுதியாக துர்கா பூஜை விழா கொண்டாடப்பட்டது. அப்போது, மர்ம நபர்கள் சிலர் கோயிலுக்குள் புகுந்து சூறையாடினர்.
இந்த வன்முறை சம்பவம் அண்டை பகுதிகளுக்கும் பரவ அது கலவரமாக மாறியது. இதில் மூன்று இந்துக்கள் உயிரிழந்தனர். நிலைமையை சீராக்க துணை ராணுவப் படை பணியமர்த்தப்பட்டது.
இந்நிலையில், வன்முறை சம்பவம் குறித்து வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா தனது கண்டத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், "கமிலா வன்முறை குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தப்ப முடியாது.
இது மிகவும் வருந்தத்தக்க நிகழ்வு. குற்றச்செயலில் ஈடுபட்டோர், எதிர்காலத்தில் இதுபோன்ற செயலை மீண்டும் செய்வதற்கு அஞ்சும் வகையில் தண்டனை அளிக்கப்படும். நாடு வளர்ச்சியின் பாதையில் செல்லும்போது அதை கெடுக்கும் வகையில் இதுபோன்ற விஷமச் செயல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த நாட்டின் மைந்தர்கள் அவர்களின் மத நம்பிக்கைகளை சுதந்திரமாக கடைப்பிடிக்க அனைத்து விதத்திலும் அரசு துணை நிற்கும். சாதி, மதம், இனம் போன்ற பாகுபாடுகளை கடந்து அனைவருக்குமான வளர்ச்சியை வங்கதேச அரசு வழங்கும்" என்றார்.
இதையும் படிங்க: கோவிட்-19 தடுப்பூசி ஏற்றுமதி மீண்டும் தொடக்கம்