பாகிஸ்தானின் 4 மாகாணங்களில் ஒன்றான பலுசிஸ்தானை தனி நாடாக அறிவிக்கக் கோரி அதன் ஆதரவாளர்கள் தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையே, உலகம் முழுவதும் உள்ள பலுசிஸ்தான் ஆதரவாளர்கள் சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்து வருவது தொடர் கதையாகி வருகிறது.
இந்நிலையில், பலுச்சிஸ்தான் ஆதரவாளரும் பெண்ணியவாதியுமான கரிமா பலுச் கனடாவின் சந்தேகத்திற்கிடமான உயிரிழந்துள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு, பிபிசி வெளியிட்ட 100 செல்வாக்கு மிக்க பெண்களின் பட்டியலில் இவரும் இடம்பெற்றிருந்தார்.
கனடாவில் வாழ்ந்து வரும் இவர், டிசம்பர் 20ஆம் தேதி காணாமல் போயுள்ளார். அவரை கண்டுபிடிக்க டொரண்டோ காவல்துறையினர் பொது மக்களின் ஆதரவைக் கேட்டுள்ளனர்.
இருந்த போதிலும், அதற்கு முன்பாகவே அவரின் உடலைக் கண்டறிந்து விட்டதாகக் கரிமாவின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். பெண்களின் பிரச்னைக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் கரிமா, ஐநா சபையில் பலுசிஸ்தான் விவகாரம் குறித்து எழுப்பினார்.
கடந்த 2019 நேர்காணல் ஒன்றில், பலுசிஸ்தானில் உள்ள வளங்கள் அனைத்தையும் பாகிஸ்தான் எடுத்துச் செல்வதாகவும் ஆனால் அந்தப் பிராந்திய மக்களைப் புறக்கணித்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
இதேபோல், கடந்த மே மாதம், பலுசிஸ்தான் பத்திரிகையாளர் சஜித் உசைன் ஸ்வீடனில் சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்து கிடந்தார்.
வெளிநாடுகளில் வாழும் பாகிஸ்தானியர்கள் தங்களை அந்நாட்டு ராணுவம் பின் தொடர்வதாக அச்சம் கொள்கின்றனர். ராணுவத்தை விமர்சிப்பதால் அவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.