இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானை பாகிஸ்தான் விடுவிக்கவில்லை என்றால், ' இரவு 9 மணிக்குள்' இந்தியா பாகிஸ்தானைத் தாக்கும் என்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி நாடாளுமன்ற கூட்டத்தில் சுட்டிக்காட்டினார் என்று பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் மூத்த தலைவர் அயாஸ் சாதிக் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வை விவரித்த அயாஸ் சாதிக், “பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் முக்கிய அமைச்சர்கள், ராணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வா உள்ளிட்ட நாடாளுமன்றத் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் குரேஷி, இந்திய விமானப்படை வீரர் அபினந்தனை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
" இந்த விவகாரம் தொடர்பாக முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், பிரதமர் இம்ரான் கான் கலந்து கொள்ள மறுத்துவிட்டார். மஹ்மூத் குரேஷி கலந்து கொண்டார். அதில் ராணுவத் தளபதி ஜெனரல் பஜ்வா அறைக்குள் வந்தார். அப்போது, அவரது கால்கள் நடுங்கின. அவருக்கு வியர்த்து கொண்டிருந்தது. கடவுளின் பொருட்டு அபிநந்தனை செல்ல விடுங்கள். இல்லையெனில் இரவு 9 மணிக்கு இந்தியா, பாகிஸ்தானைத் தாக்கும் என தெரிவித்தார்."
அபிநந்தன் உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் எதிர்க்கட்சிகள் பிரதமர் இம்ரான் கான் அரசை ஆதரித்துள்ளது. ஆனால் இனிமேலும் ஆதரிக்க முடியாது என்று சாதிக் கூறினார்.
பிப்ரவரி 27, 2019 அன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் விமானப்படைக்கு இடையிலான மோதலின்போது, இந்திய வான்வெளி எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் விமானமான எஃப் -16 ஐ இந்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் சுட்டு வீழ்த்தினார். அந்த நேரத்தில், அவரது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டார்.
மார்ச் 1, 2019 அன்று அத்தாரி-வாகா எல்லையிலிருந்து அபிநந்தன் வர்தமான் இந்தியா திரும்பினார். அவருக்கு, குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த், சுதந்திர தினத்தன்று வீர் சக்ரா விருது வழங்கி கெளரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.