கரோனா தொற்றின் தாக்கம் ஒருபுறம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மறுபுறம் கரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகளில் உலகெங்கும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதில், பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருந்து அனைவரது நம்பிக்கையையும் பெற்றுள்ளது. தற்போது மூன்றாம் கட்ட மருத்துவப் பரிசோதனைகளில் இந்தத் தடுப்பு மருந்தைப் பெற பல்வேறு நாடுகளும் ஆர்வம் காட்டி வருகின்றன.
அதன்படி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்சியாளர்களின் இந்த கரோனா தடுப்பு மருந்தைப் பெற ஆஸ்திரேலிய அரசு புதிதாக ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. இது குறித்து பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், "இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஒவ்வொரு ஆஸ்திரேலிய குடிமகனும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் கோவிட்-19 தடுப்பூசியை இலவசமாகப் பெற முடியும்.
இந்த தடுப்பூசி சோதனைகள் வெற்றிகரமாக நிறைவடையும் பட்சத்தில் தடுப்பு மருந்துகளை நாங்களே தயாரித்து, அதை 25 மில்லியன் ஆஸ்திரேலியர்களுக்கு இலவசமாக வழங்குவோம்" என்றார்.
மேலும், அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் தடுப்பு மருந்துகளை மற்ற நாடுகளுக்கு வழங்குவது குறித்தும் பல நாட்டு பிரதமர்களுடன் ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். பசிபிக் நாடுகளுக்கு கரோனா தடுப்பு மருந்தை அளிப்பதில் ஆஸ்திரேலியாவும் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் ஸ்காட் மாரிசன் செய்தியாளர்களிடம் கூறினார்.
இதையும் படிங்க: ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஜோ பிடன் அறிவிப்பு!