சீன அறிவியல் அகாடமி மற்றும் நுண்ணுயிரியல் நிறுவனம் இணைந்து உருவாக்கிய இந்த தடுப்பூசிக்கு ஜூன் 19ஆம் தேதி அந்நாட்டின் தேசிய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் அனுமதி வழங்கப்பட்டதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கரோனா தடுப்பூசிக்கான கட்டம் -1 மற்றும் கட்டம் -2 மருத்துவ பரிசோதனையை ஜூன் 23ஆம் தேதியன்று தொடங்கப்பட்டது. பெய்ஜிங், சோங்கிங் மற்றும் ஹுனான் ஆகிய மாகாணங்களை சேர்ந்த 18 முதல் 59 வயதுக்கு உள்பட தன்னார்வலர்களுக்கு, இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டு, இது மனிதர்கள் பயன்படுத்த பாதுகாப்பானதா என்று பரிசோதிக்கப்பட்டது.
ஆரம்ப கட்ட சோதனைகளின் முடிவில் இந்தத் தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு நேர்மறையான தரவுகள் கிடைத்தன. மேலும் அடுத்தகட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கான சாத்தியத்தை பரிந்துரைத்தன. இந்த ஆராய்ச்சி ஹுனான் மாகாணத்தின் சியாங்டான் கவுண்டியில் தொடங்கப்பட்டது. இதில், 18 வயதிற்கும் மேற்பட்ட 29,000 தன்னார்வலர்களை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மாத இறுதியில் உஸ்பெகிஸ்தானில் கரோனா தடுப்பூசி மருத்துவ பரிசோதனை தொடர்பான உலகளாவிய சோதனைகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதைத்தொடர்ந்து இந்தோனேசியா, பாகிஸ்தான் மற்றும் ஈக்வடார் ஆகிய நாடுகளில் சோதனைகள் நடைபெறும்.
கரோனா தடுப்பூசிக்கான ஆண்டு உற்பத்தி திறன் 300 மில்லியன் அளவு இருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரேசில், பாகிஸ்தான் மற்றும் பெரு ஆகிய நாடுகளில் சீனாவின் ஐந்து கரோனா தடுப்பூசி மருத்தின் மருத்துவ பரிசோதனை மூன்றாம் கட்டத்திற்கு உள்பட்டுள்ளதாக சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.