சீனாவின் வூஹான் நகரில் கடந்த ஆண்டு (2019) டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் நோய் தற்போது உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த நோய் காரணமாக உலகளவில் இதுவரை 33 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கரோனா குறித்து உலக சுகாதார அமைப்பு தவறாக கணித்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விமர்சித்தார். மேலும், அதற்கு அளித்துவரும் நிதியை தற்காலிகமாக நிறுத்தி உத்தரவிட்டார்.
உலக சுகாதார அமைப்பு சீனாவின் மக்கள் தொடர்புத்துறை அமைப்பாக செயல்பட்டுவருகிறது என தனது விமர்சனங்களை தொடர்ந்து முன்வைத்துவந்தார். இந்தச் சூழலில், கோவிட்-19 பிறப்பிடமான வூஹான் நகரில் அந்நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அனைவரும் குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாகச் சீன தேசிய சுகாதார ஆணையத்தின் செய்தித்தொடர்பாளர் மி ஃபெங் தெரிவித்துள்ளார்.
பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வந்த சீனாவை பாராட்டி உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. மற்ற நாடுகள் சீனாவிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கரோனா அவசர சிகிச்சைக்காக தரப்படும் ரெம்டேசிவிர் மருந்து