காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டின் பெரும்பாலான பகுதிகளை கடந்த சில நாட்களில் கைப்பற்றிய தலிபான்கள், காபூலை இன்று சுற்றி வளைத்தனர். இருப்பினும், தாக்குதல் நடத்தி காபூலை கைப்பற்றப்போவதில்லை எனவும், அமைதியான அதிகார மாற்றத்திற்காக காத்திருக்கிறோம் எனவும் தலிபான்களின் செய்தித்தொடர்பாளர் சுகைல் சாஹீன் தெரிவித்திருந்தார்.
ஆட்சியை தலிபான்களிடம் ஒப்படைப்பது தொடர்பாக தலிபான்களுடன் பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றதாக கூறப்பட்ட நிலையில், ஆப்கான் அதிபர் அஷ்ரப் கானி நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இடைக்கால அரசாங்கத்தை அமைக்க அவர் ஒப்புதல் வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்ட இருவருடன் அவர் நாட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. அஷ்ரப் கானி எங்கு சென்றுள்ளார் என்பது குறித்த விவரம் தற்போதுவரை தெரியவில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன்பு 17 மாகாணங்களை தலிபான்கள் கைப்பற்றியபோது, நாட்டை விட்டு நான் தப்பியோட மாட்டேன் என அஷ்ரப் கானி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அமைதியான அதிகார மாற்றத்திற்காக காத்திருக்கிறோம் - தலிபான் செய்தித்தொடர்பாளர்