ஆப்கானிஸ்தானில் அதிபர் பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தலிபான்களின் அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் தேர்தலில் பதிவான வாக்குகள் குறைந்தே இருந்தன.
தலிபான்களால் தள்ளிவைக்கப்பட்ட தேர்தல்
மேலும், நவம்பர் 14ஆம் தேதி வெளியாக வேண்டிய தேர்தல் முடிவுகள், தலிபான்களின் அச்சுறுத்தல்கள் காரணமாக இருமுறை தள்ளிவைக்கப்பட்டன. தேர்தல் முடிவுகள் தள்ளிவைக்கப்பட்ட காரணத்தினால் ஆப்கானிஸ்தானில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்தன.
அஷ்ரஃப் கனி வெற்றி!
இந்நிலையில், தற்போது ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலின் முதற்கட்ட முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில், தற்போது அதிபராகவுள்ள அஷ்ரஃப் கனி ஒன்பது லட்சத்து 23 ஆயிரத்து 868 வாக்குகள் பெற்று சுமார் 50.64 விழுக்காடு வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அப்துல்லா அப்துல்லா 39.52 விழுக்காடு வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.
குட்டு வெளிப்படும் - அப்துல்லா
இத்தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதால் தேர்தல் முடிவுகளை தான் நிராகரிப்பதாகவும் இறுதி முடிவுகள் வருவதற்குள் தேர்தலில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து புகாரளிக்கப்படும் என்றும் அப்துல்லா தெரிவித்துள்ளார். தேர்தலின் இறுதி முடிவு வெளியாக இன்னும் சில வாரங்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நீல வண்ண வானை அழகாக்கும் சூரிய கிரகணம்: தெரிந்து கொள்வோம்!