ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமைந்துள்ள மகப்பேறு மருத்துவமனையில் இன்று காலை அடையாளம் தெரியாத ஒரு கும்பல் துப்பாக்கிகளுடன் நுழைந்து அங்கு பணியிலிருந்த காவல்துறையினரை நோக்கித் தாக்குதல் நடத்தியது.
பதிலுக்குக் காவல்துறையினரும் அக்கும்பல் மீது தாக்குதல் நடத்த மருத்துவமனை போர்க்களமானது. தொடர்ந்து நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சண்டையில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சர் கூறுகையில், "பயங்கரவாதிகளைச் சுட்டுவீழ்த்தி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்புப் படையினர் முயன்று வருகின்றனர்" என்றார்.
இதனிடையே, 80-க்கும் அதிகமான பெண்கள், குழந்தைகளை அரசுப் படையினர் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்தத் தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
தாக்குதலுக்கு உள்ளான மகப்பேறு மருத்துவமனை ஷியா இஸ்லாமியப் பிரிவினர் அதிகம் வாசிக்கும் தார்ஷிதி பார்சி என்ற பகுதியில் அமைந்துள்ளது. முன்னதாக, தலிபான், ஐஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகள் பலமுறை இங்குத் தாக்குதல் நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, நங்கர்ஹார் மாகாணத்தின் கிழக்குப் பகுதியில், அரசாங்கத்துக்கு ஆதரவான கிளர்ச்சிப் படைத் தலைவரின் ஈமச் சடங்கில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில், 10 பேர் கொல்லப்பட்டனர். ஏறக்குறைய 30 பேர் காயமடைந்தனர்.
இது குறித்து ட்வீட் செய்திருந்த தலிபான் செய்தித்தொடர்பாளர் ஜெய்புல்லா முஜாஹித், "நங்கர்ஹாரில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை" எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : ஏழை தொழிலாளர்களை சுரண்டும் பாஜக அரசு - ஸ்டாலின் காட்டம்