சிங்கப்பூரில் 250 இந்தியர்கள் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 50 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் தொழிலாளர்களாக சிங்கப்பூரில் குடியிருப்பவர்கள்.
தற்போது அவர்களை தனிமைப்படுத்தி, சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிங்கப்பூரில் முதல் கோவிட்-19 பாதிப்பு கடந்த மாதம் 29ஆம் தேதி கண்டறியப்பட்டது.
அங்கு தற்போது நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 1,910 ஆக உயர்ந்துள்ளது. இதில் வியாழக்கிழமை மட்டும் (ஏப்ரல்10) சுமார் 280 பேருக்கு கோவிட்-19 பெருந்தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இந்நிலையில் கோவிட்-19 பெருந்தொற்று கட்டுப்பாடு பணிக்குழுவின் இணைத் தலைவராக இருக்கும் தேசிய மேம்பாட்டுத் துறை அமைச்சர் லாரன்ஸ் வோங், “வெளிநாட்டுத் தொழிலாளர் தங்குமிடங்களில் கரோனா வைரஸ் பாதிப்புகள் உயர வாய்ப்புள்ளது. ஒருவேளை அது வரும் வாரங்களில் கூட இருக்கலாம்” என்று அச்சம் தெரிவித்தார். சிங்கப்பூரில் கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு இதுவரை ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.