ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நேற்று இரவு திருமண நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அப்போது, திருமண மண்டபத்தின் ஆண்கள் வரவேற்பறையில் திடீரென பயங்கர சத்தத்தோடு வெடிகுண்டு ஒன்று வெடித்துள்ளது.
இதில், குறைந்தது 63 பேர் பலியானதாகவும், 180 பேர் படுகாயமடைந்ததாகவும் டோலோ நியூஸ் என்ற உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
நிகழ்விடத்தில் ஆயிரக்கணக்கானோர் இருந்ததாக சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் தெரிவிக்கின்றன. காயமடைந்தோர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கானி, இது மனிதத் தன்மையற்ற செயல் எனவும் வேதனை தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த வாரம் காபூலில் உள்ள ஒரு காவல் நிலையம் அருகே இருந்த வாகனம் மீது தாலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 14 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு பக்கம் அமைதி பேச்சுவார்த்தை! மறுபக்கம் தாக்குதல்
கத்தார் தலைநகர் தோகாவில் ஆப்கானிஸ்தானுக்கும் தாலிபானுக்கும் இடையே சுமூக உறவை ஏற்படுத்தும்விதமாக அமெரிக்கா மத்தியஸ்தமாக இருந்து சமரச பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஏற்கனவே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். இந்த நிலையில்தான், இந்தக் கொடூரத் தாக்குதல் அரங்கேறியுள்ளது.