ஆப்கானிஸ்தானில் பல ஆண்டுகளாக நீடிக்கும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, அந்நாட்டு அரசுக்கும் தாலிபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கத்தார் தலைநகர் தோகாவில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. ஆனால், பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இதுவரை ஏற்படாத நிலையில், ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்கின்றன.
குறிப்பாக பாதுகாப்புப் படை வீரர்களையும், காவல் துறையினரையும் குறிவைத்து தாலிபான் அமைப்பு தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்திவருகிறது.
இந்நிலையில் பக்தியா மாகாணம், ரொகானா பாபா மாவட்டம் சோதனைச்சாவடியில் நேற்று (நவ. 01) இரவு பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தக்குதலில் 15 படை வீரர்கள் கொல்லப்பட்டனர் அல்லது அவர்கள் காயமடைந்திருக்கலாம் என டோலோ என்ற ஊடகத்தில் செய்தி வெளியாகி உள்ளது. இந்தத் தாக்குதலுக்கு எந்த ஒரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
இதேபோல், காபூலில் கவாஜா சப்ஸ் போஷ் பகுதியில் இன்று (நவ. 02) காலை நடந்த குண்டு வெடிப்பில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவர், பொதுமக்களில் ஒருவர் காயமடைந்தனர்.