இந்தியா, சீனா, கிர்கிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட எட்டு உறுப்பு நாடுகளைக் கொண்டது சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு. ஆண்டுதோறும், இந்த அமைப்பு சார்பில் நடத்தப்படும் மாநாட்டில், உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பர். அப்பொழுது, பயங்கரவாதம், பாதுகாப்பு, சுற்றுச்சுழல் தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அந்த வகையில், நடப்பாண்டிற்கான மாநாடு கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில் நடைபெற்று வருகிறது.
இதில், இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஸி ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், சுகாதாரம், விளையாட்டு, சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த 14 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டுச்செயலாளர் மதுமிதா பாகாட், செயலாளர் சர்மா, மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவிஷ் குமார் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அவர், "14 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின, இதில் சில ஒப்பந்தங்கள் சாங்காய் ஒத்துழைப்பு அமைப்புகளுடனும், ஐ.நா சிறப்பு அமைப்புகளுடனும் கையெழுத்தாகின" என்றார்.
பாகாட் கூறுகையில், "இரண்டு கட்டங்களாக மாநாடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. முதலில் உறுப்பு நாடுகள் மட்டும் பங்கேற்றன. பின்னர், பார்வையாளர்களாக உள்ள நாடுகளும் கலந்து கொண்டன. ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்புவது குறித்த பேச்சுவார்த்தையில் இந்தியாவின் ஆதரவு பற்றி ஆலோசிக்கப்பட்டது" என்றார்.
இதைத் தொடர்ந்து பேசிய கிடேஷ் சர்மா, அடுத்த சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டை ரஷ்யா நடத்த உள்ளதால், பிரதமர் மோடி புதினுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.