அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள பேம்பி பேபி என்னும் கடையில் மூன்று பெண்கள் ஒரே கூட்டாக கடைக்குச் சென்றுள்ளனர். மூன்று பெண்களும் கையில் அவர்களது குழந்தையை வைத்துள்ளனர். அதில் இரண்டு பேர் கடையின் உரிமையாளரிடம் பேசிக் கொண்டிருக்கையில் மற்றொரு பெண் அங்கிருக்கும் பொருளை திருடிக் கொண்டு சென்றுள்ளார்.
பொருளை திருடிய பின், அலட்சியத்தில் அவருடைய குழந்தையை கடையிலேயே விட்டுச் சென்றுள்ளார். பின் தவறை உணர்ந்த அப்பெண் குழந்தையை ஆறு நிமிடத்திற்குப் பின் கடைக்கு வந்து அழைத்துச் சென்றுள்ளார். இக்காட்சிகள் அனைத்தும் கடையில் உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. சிசிடிவியை வைத்து மூன்று பெண்களில் இரண்டு பெண்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக கடையில் இருந்தவர்கள் கூறியதாவது, "பொருட்களை திருடுவது என்பது அப்பெண்ணின் தனிப்பட்ட ஒன்று. ஆனால் குழந்தையை மறந்து கடையிலேயே விட்டுச் செல்லும் அளவிற்கு அப்பெண்ணிற்கு என்ன ஒரு அலட்சியம். இது முற்றிலும் தவறான செயல்" என ஒருமித்தக் குரலில் தங்களது வேதனையை பதிய வைத்தனர். குழந்தையின் மேல் அக்கறை இல்லை என அக்கடையிலிருந்தவர்கள் கூறினாலும், அப்பெண் திருடிய பொருள் என்னவென்று பார்த்தால் மிகவும் ஆச்சர்யப்படுவீர்கள்...அது வேறு ஒன்றும் அல்ல...குழந்தையை வைத்து அழைத்துச் செல்லும் வண்டி!