பலவிதமான கின்னஸ் சாதனைகளை நாம் பார்த்திருப்போம். ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த 31 வயதான பெண் ஒருவர், தனது வாயை அதிக நீளத்திற்குத் திறந்தே கின்னஸ் சாதனைப் படைத்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த சமந்தா ராம்ஸ்டெல், வாயை அதிக நீளத்திற்குத் திறந்து டிக்டாக் காணொலிகளைப் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். பர்கர், பழங்கள் போன்றவற்றை ஒரே முறையில் வாயில் திணிப்பது போன்ற காணொலிகளைப் பதிவிட்டு லைக்குகளை அள்ளிவந்தார்.
அவரது திறமையைப் பலரும் பாராட்டினாலும், அவரது வாய் பெருசு எனப் பலரும் பகடியடித்துவந்தனர். நண்பர்கள் மூலம், வாயைத் திறப்பதிலும் சாதனைப் படைக்கலாம் என்பதை அவர் தெரிந்துகொண்டார்.
உடனடியாக பல் மருத்துவரைச் சந்தித்த சமந்தா, கின்னஸ் சாதனைக்காக வாயைத் திறக்கும் தூரத்தை அளவிட கூறினார். மருத்துவர் எல்.கே. சேங் சாம், அவரது வாயின் நீளம், அகலத்தை டிஜிட்டல் காலிப்பர்கள் மூலம் அளவிட்டு மதிப்பாய்வு செய்தார்.
அதில், அவர் வாயை 6.52 செ.மீ. அளவிற்கு அகலமாகத் திறந்து புதிய சாதனைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். பல கேலி கிண்டல்களைச் சந்தித்துவந்த சமந்தா, கின்னஸ் சாதனை படைத்து அனைவருக்கும் தனது திறமையை நிரூபித்துள்ளார்.
இதையும் படிங்க: ஒலிம்பிக்கில் ஆணுறை சப்ளை ஏன்?