அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தலைமையிலான அரசு 2010ஆம் ஆண்டு 'Affordable Care Act' என்ற சட்டத்தைக் கொண்டுவந்தது. 'ஒபாமா கேர்' எனப் பரவலாக அறியப்படும் இந்தச் சட்டம் அமெரிக்கர்கள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீட்டு பெற்றுத் தரவும், அவர்களின் மருத்துவச் செலவைக் குறைக்கவும் வழிவகை செய்கிறது.
இந்நிலையில், இந்தச் சட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கில் ஜனநாயகக் கட்சியினர் (எதிர்க்கட்சி) சட்டத்திருத்த மசோதா ஒன்றை முன்மொழிந்துள்ளனர்.
இந்தச் சட்டத் திருத்த மசோதா அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் (நாடாளுமன்ற கீழ் சபை) ஜூன் 29ஆம் தேதி தாக்கல்செய்யப்பட்டு, பின்னர் வாக்கெடுப்பு நடைபெறும் என அச்சபையின் தலைவர் நான்சி பெலோசி அறிவித்துள்ளார்.
இதனிடையே, 'ஒமாபா கேர்' சட்டத்துக்கு எதிராக அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கில் அந்நாட்டு அரசு இன்று (ஜூன் 25ஆம் தேதி) அதன் வாதத்தை எழுத்து வடிவில் முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெக்சாஸ் உள்ளிட்ட மாகாண அரசுகள் தொடர்ந்த இந்த வழக்கில், "அமெரிக்க நாடாளுமன்றத்தில் 2017ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 'Tax Cuts and Jobs Act' சட்டத்தை மீறும் வகையில் 'ஒபாமா கேர்' சட்டம் இருப்பதாகவும், ஆகையால் அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்துக்கு அது எதிரானதென்று தீர்ப்பளிக்க வேண்டும்" எனக் கோரியுள்ளன.
அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் 2017ஆம் ஆண்டு பதவியேற்ற பிறகு, முதல் வேளையாக 'ஒபாமா கேர்' சட்டத்தை ரத்துசெய்ய முற்பட்டார். இந்த முயற்சி தோல்வியில் முடிந்ததை அடுத்து, அச்சட்டத்துக்கு இருந்த செல்வாக்கு அபரிவிதமாகக் கூடியது.
இந்தச் சட்டம் தொடர்பாக அமெரிக்க தொண்டு நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் 51 விழுக்காடு அமெரிக்கர்கள் அதனை ஆதரிப்பதாகத் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இந்தோனேஷியா அருகே 94 ரோஹிங்கியா இன மக்கள் மீட்பு