74ஆவது ஐநா பொதுக்கூட்டத்தையொட்டி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவுக்கு வருமாறு அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
அதன்படி, அதிபர் ட்ரம்ப் தன் மனைவி மெலனியா ட்ரம்ப்புடன் வரும் 24, 25 ஆகிய தேதிகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில், இந்தப் பயணம் குறித்து வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், "இந்திய பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். இந்தப் பயணத்தின்போது இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தகம் கையெழுத்தாக வாய்ப்புள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
வர்த்தக ஒப்பந்தம் எட்டுவது குறித்து வர்த்தகத் துறை அமைச்சர் பியூஸ் கோயல், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ராபர்ட் லைட்டைஸர் ஆகியோர் கடந்த சில வாரங்களாக தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.
அமெரிக்க அதிபரின் வருகை குறித்து ட்வீட் செய்திருந்த பிரதமர் மோடி, "பல்வேறு விவகாரங்களில் இருநாடுகளும் தீவிர ஒத்துழைப்பியில் ஈடுபட்டுவருகின்றன. இந்தியா-அமெரிக்கா நட்புறவை அதிபரின் பயணம் மேலும் வலுப்படுத்தும்" என்றார்.
இதையும் படிங்க : அகமதாபாத்தில் ட்ரம்ப்புக்குப் பிரம்மாண்ட பேரணி