கோவிட்-19 வைரஸ் (கொரோனா) தொற்று கடந்தாண்டு இறுதியில் சீனாவில் பரவியது. தற்போது கனடா, அமெரிக்கா, ஈரான், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் நூற்றுக்கணக்கான மக்கள் கோவிட் 19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளிலும் தற்போது இந்த வைரஸ் தொற்று பரவிவருவதால், மக்களிடையே பெரும் பீதி நிலவிவருகிறது. இந்நிலையில், கோவிட்-19 குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த சமூக வலைதளங்களில் பரப்புரைகள் தொடங்கப்படும் என்று உலக சுகாதார அமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறுகையில், "கோவிட்-19 வைரஸ் தொற்றால் மக்களிடையே தற்போது பெரும் அச்சம் நிலவுகிறது. இது மிகவும் இயல்பான ஒன்று. மக்களுக்கு தேவையான தகவல்களை அளிப்பதன் மூலம் இந்தத் தேவையற்ற அச்சத்தைப் போக்க முடியும்.
கோவிட்-19 வைரஸ் குறித்து நமக்கு பல தகவல்கள் இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஆனால், இந்த வைரஸ் தொற்று குறித்து தினமும் பல புதிய தகவல்களை அறிந்துகொள்கிறோம். இந்த வைரஸ் தொற்றுக்கு எதிராக நாம் எந்த மாதிரியான நடவடிக்கையை மேற்கொள்கிறோம் என்பது முக்கியம்.
வைரஸ் தொற்று நமக்கு பரவாமல் இருக்கவும் அதையும் தாண்டி நாம் பாதிக்கப்பட்டால், அது மற்றவர்களுக்கு பரவாமல் பாதுகாப்பதும் நம் அனைவரது பொறுப்பு" என்று தெரிவித்தார்.
"கோவிட் 19-ஐ சந்திக்க தயாராகுங்கள்" ("Be Ready for COVID-19") என்ற தலைப்பில் இந்தப் பரப்புரை மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கொரோனா வைரஸ்சால் சீனாவுக்கு கிடைத்த ஒரே நன்மை!