சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹான் நகரில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இந்த வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்த சீன அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவரும் நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், நான்காயிரத்து 500-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், சீனாவில் உள்ள இந்தியர்களை அழைத்துவர ஹூபே மாகாணத்திலிருந்து இரண்டு விமானங்களை இயக்க அந்நாட்டு அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், கரோனா வைரஸ் இந்தியாவில் பரவாமல் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இது குறித்து பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு பதிலளிக்க 24 மணி நேரமும் செயல்படக்கூடிய வகையில் 011-23978046 என்ற அலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில், கரோனா வைரஸ் தொடர்பாக விவாதிக்க உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர், 'டெட்ரோஸ் அதனோம் கேப்ரேயேசுஸ்', உலக நாடுகளுக்கு அழைப்புவிடுத்துள்ளார்.
அதில், சீனாவில் 2002-03ஆம் ஆண்டில் ஏற்பட்ட சார்ஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைவிட, கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக உள்ளனர்.
எனவே, இது தொடர்பாக சுவிட்சர்லாந்து தலைநகர் ஜெனீவாவில் இன்று நடைபெறவுள்ள விவாதத்தில் உலக நாடுகளின் சுகாதார அமைப்புகள் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.