அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், "அவர்கள்(உலக சுகாதார அமைப்பு) சீனாவின் கைப்பாவையாகச் செயல்பட்டுவருகின்றனர். அவர்கள் சீனாவுக்கு ஆதரவாகவே செயல்பட்டுவருகின்றனர். சுருங்கச் சொன்னால் உலக சுகாதார அமைப்பு சீனாவின் கைப்பாவையாக மாறிவிட்டது.
அவர்களின் செயல்பாடு மிக மோசமாக உள்ளது. அமெரிக்கா ஆண்டுதோறும் 450 மில்லியன் டாலர்களை உலக சுகாதார அமைப்புக்கு வழங்குகிறது. சீனா வெறும் 38 மில்லியன் டாலர்களை மட்டுமே வழங்குகிறது" என்றார்.
சீனா மீது விதிக்கப்பட்ட போக்குவரத்துத் தடை குறித்துப் பேசிய ட்ரம்ப், "நான் சீனாவிலிருந்து வருபவர்களுக்கு தடை விதித்தபோது, உலக சுகாதார அமைப்பு அதற்கு எதிராக இருந்தது. எனது முடிவு தீவிரமானது என்றும் தேவையற்றது என்றும் உலக சுகாதார அமைப்பு விமர்சித்தது. ஆனால் அவர்களின் கருத்து தவறானது என்பது இப்போது தெரியவந்துள்ளது.
ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரும் முன்னாள் துணை அதிபருமான ஜோ பிடன்கூட எனது முடிவுக்கு எதிராகவே இருந்தார். சீனாவுக்கு எதிராக முடிவுகளை நான் முன்முடிவுடன் எடுப்பதாக பிடன் குறிப்பிட்டார். நான் அப்படித்தான் இருந்தேன். ஏனென்றால் சீனாவிலிருந்து அவர்கள் நம் நாட்டிற்குள் வரக்கூடாது.
நான் மட்டும் போக்குவரத்து தடையைப் பிறப்பிக்கவில்லை என்றால் இன்னும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கலாம். எனவே, அது மிகவும் முக்கியமான ஒரு முடிவு. எனது முடிவால் ஆயிரக்கணக்கான மக்களின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது" என்றார்.
அமெரிக்காவில் இதுவரை 15,50,294 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 91,981 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: ஊரடங்கை தளர்த்தினால் நிலைமை இன்னும் மோசமாகலாம்