இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டிருந்த அறிக்கையில், "சுயலாபத்துக்காக தென் சூடானில் அமைதி திரும்புவதற்கு இடையூறாக இருந்த அந்நாட்டின் அமைச்சரவை விவகாரங்கள் துறை அமைச்சர் மார்டின் இலியா லொமுரோ, பாதுகாப்புத் துறை அமைச்சர் குவோல் மன்யாங் ஜூக் ஆகியோர் மீது கெடுபிடி விதிக்கப்படுகிறது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அவர்கள் இருவருக்கும் அமெரிக்கா நுழைவு இசைவு (விசா) வழங்காது. அமெரிக்காவில் இந்த நபர்கள் வைத்திருக்கும் சொத்துகள் அனைத்தும் முடக்கப்படும். அமெரிக்கர்கள் இவர்களுடன் வர்த்தக ரீதியாகத் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது" எனக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ, "தென் சூடானில் அமைதி திரும்புவதற்கு இடையூறாக செயல்படும் நபர்களுக்கு அமெரிக்க நுழைவு இசைவு வழங்காது. ஆனால் அந்நாட்டு அலுவலர்களோ இதனை கிஞ்சித்தும் மதிக்காமல் செயல்பட்டுவருகின்றனர்" என்றார்.
2013 டிசம்பர் மாதம் முதல் தென் சூடானில் உள்நாட்டுப் போர் நடைபெற்றுவருகிறது. அந்நாட்டு அதிபர் சால்வா கீர், எதிர்க்கட்சித் தலைவர் கீக் மசார் ஆகியோர்களுக்கு ஆதரவான படைகளுக்கிடையே மோதல் நிலவுகிறது. இந்தப் போரை நிறுத்துவதற்காக 2015ஆம் ஆண்டு அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஆனால், 2016 ஜூன் மாதம் மீண்டும் வன்முறைகள் வெடித்தன. இதையடுத்து, இருபிரிவினருக்கும் இடையே, 2018 செப்டம்பர் மாதம் புதிதாக ஒரு அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க : அமெரிக்கா - சீனா வர்த்தக உடன்பாடு நம்பிக்கையளிக்கிறது!