சீனாவின் வூஹான் நகரில் முதலில் கண்டறியப்பட்ட கோவிட்-19 தற்போது பல்வேறு நாடுகளுக்கும் பரவியுள்ளது. இந்தத் தொற்றால் அதிகம் பாதித்த அமெரிக்கா, கரோனா பரவலுக்குச் சீனாதான் காரணம் என்று தொடர்ந்து குற்றஞ்சாட்டிவருகிறது.
இந்நிலையில், கரோனா குறித்து அமெரிக்காவில் நடத்தப்படும் ஆய்வுகளின் தகவல்களை சில ஹேக்கர்கள் திருட முயல்வதாகவும் அவர்களுக்கு சீனா ஆதரவளிப்பதாகவும் அமெரிக்காவின் புலனாய்வு நிறுவனமான எஃப்.பி.ஐ. அமைப்பும் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பின் சைபர் பிரிவும் எச்சரிக்கை விடுத்துள்ளன.
மருந்து ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வுகளின் தரவுகளைப் பாதுகாக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா எச்சரிக்கைவிடுத்துள்ளது. இருப்பினும் எந்தெந்த நிறுவனங்கள் இந்த சைபர் தாக்குதலில் குறிவைக்கப்பட்டுள்ளன என்பது குறித்த தகவல்களை அமெரிக்கா வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்த எந்த நிறுவனங்களின் முயற்சிகள் ஊடகங்களில் பாராட்டு பெறுகின்றனவையோ அவையே குறிவைக்கப்படுவதாகக் கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அமெரிக்காவின் நீதித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவல் திருட்டு என்பது அந்நிறுவனங்கள் உண்மையான ஆய்வு முடிவுகளைத் தருவதை பாதிக்கும் என்றும் நீதித் துறை கவலை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் இந்தத் தொற்று காரணமாக 14 லட்சத்து 30 ஆயிரத்து 348 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 85 ஆயிரத்து 197 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா வைரஸ் - இயல்பாகிப் போன புதிய சூழல்