சீனா, தென் கொரியா, ஈரான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் பரவிவரும் கோவிட்-19 (கொரோனா வைரஸ்) தற்போது அமெரிக்காவிலும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது.
இந்தச் சூழலில், அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் கோவிட்-19 வைரஸ் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் அறிவித்துள்ளது. இந்தச் செய்தி அந்நாட்டு மக்களைப் பீதியடையச் செய்துள்ளது.
இதையடுத்து, வைரஸ் மேலும் பரவுவதைத் தடுக்க ஈரான், இத்தாலி, தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு அமெரிக்கர்கள் பயணிக்கக் கூடாது எனத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், வாஷிங்டன் மாகாணத்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இதுவரை 60 பேருக்கு கோவிட்-19 வைரஸ் பாதிப்பிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் சீனாவிலிருந்தோ, ஜப்பானில் சிறைப்பிடிக்கப்பட்ட டைமண்ட் பிரின்ஸ் சொகுசுக் கப்பலிலிருந்தோ மீட்கப்பட்டவர்களாவர்.
சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தென்கொரியா, ஈரான், இத்தாலி என சுமார் 60 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் காரணமாக இதுவரை இரண்டாயிரத்து 900-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கொரியாவை மிரட்டும் கொரோனா: 3,000 பேர் பாதிப்பு