சர்வதேச நாடுகளில் இருக்கும் பயங்கரவாதம் குறித்தும் அதைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் அமெரிக்க உள்துறை அமைச்சகம் ஆண்டுதோறும் அறிக்கைத் தாக்கல் செய்வது வழக்கம்.
அதன்படி, சர்வதேச பயங்கரவாதம் குறித்த 2019ஆம் ஆண்டிற்கான அறிக்கையை அமெரிக்க உள்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் ஆசிய பிராந்தியத்தைக் குறிவைத்து இயங்கும் பயங்கரவாதிகளுக்கு, பாகிஸ்தான் இன்னும் புகலிடமாகத் திகழ்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து பயங்கரவாத குழுக்களுக்குக் கிடைக்கும் நிதியுதவிகளை தடுப்பதிலும், இந்தியாவை குறிவைத்து இயங்கும் பயங்கரவாத குழுக்களை கட்டுப்படுத்துவதிலும் பாகிஸ்தான் "மிகவும் சுமாரான" நடவடிக்கைகளை மட்டுமே எடுத்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அரசு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத நிறுவனத்தைத் தோற்றுவித்த ஹபீஸ் சயீத் உள்ளிட்ட சில பயங்கரவாதிகள் மீது குறிப்பிடத்தகுந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இருப்பினும், ஜெய்ஷ்-இ-முகமது நிறுவனரும் ஐ.நா.வால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட அசார், 2008ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற தாக்குதல்களைத் திட்டமிட்ட சஜித் மிர் ஆகியோர் மீது போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் அமெரிக்கா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஐ.நா.வின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக்கிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து கருத்து கூற மறுத்த அவர்,"வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால், அனைத்து உறுப்பு நாடுகளும் ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தியுள்ள கடமைகளுக்கு முழுமையாகக் கட்டுப்பட வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்றார்.
இதையும் படிங்க: 'ஒபாமா கேர்' மசோதா மீது விரைவில் வாக்கெடுப்பு!