கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவ வேண்டும் என்று தென் கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தொடர்ந்து கோரிக்கை வைத்துவந்தன. இதன் விளைவாக 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பில் ட்ரம்ப் - கிம் ஜாங் உன் ஆகியோர் பங்கேற்றனர். இதில் அணு ஆயுத சோதனைகளை கைவிடுவதாக வட கொரியா தலைவர் கிம் ஜாங் உத்தரவாதம் அளித்தார்.
இதனையடுத்து, இரு நாடுகளுக்கிடையே சுமுக உறவு ஏற்பட்டாலும், அவ்வப்போது அணு ஆயுத சோதனைகளை தொடர்பான முரண்பட்ட தகவல் வெளியாகி பதற்றமான சூழல் உருவானது.
இதனையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் வியட்நாமில் நடைபெற்ற இரண்டாம் கட்ட சந்திப்பில், எவ்வித உடன்படிக்கையும் எட்டப்படாததால் இரு நாடுகளுக்கிடையிலான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. எனினும், தங்களுக்குள் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளும், சுமுகமான உறவும் நீடிப்பதாக அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, வடகொரியா அணு ஆயுத சோதனைக்கு தயாராகி வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, இதனை முற்றிலுமாக அந்நாடு மறுத்துள்ளது. இத்தகைய சூழலில் வட கொரியா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை முறியடிக்க இரண்டு சீன நிறுவனங்கள் உதவி செய்ததாக அமெரிக்க அறிவித்தது. இதனையடுத்து அந்த நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை விதித்த அமெரிக்கா, மற்ற நிறுவனங்களுக்கும் எச்சரிக்கை விடுத்ததுள்ளது.
இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த விவகாரம் தொடர்பாக பதிவிட்டுள்ள அதிபர் ட்ரம்ப், வட கொரியா மீது விதிக்கப்பட்டுள்ள கூடுதல் பொருளாதாரத் தடைகளை நீக்க தான் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.