உலகம் முழுவதும் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கரோனா வைரசுக்கு எதிரான மருந்தைக் கண்டறிய பல்வேறு ஆய்வு நிறுவனங்களும் தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் அமெரிக்காவின் கில்லட் சயின்ஸ் மருந்து நிறுவனத்தால் கண்டறியப்பட்ட ரெம்டேசிவிர் என்ற மருந்து கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த மருந்தைப் பயன்படுத்துவதன் மூலம் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வேகமாக குணமடைந்து வீடு திரும்புவதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் அமெரிக்காவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டேசிவிர் மருந்தினைக் கொடுத்துவருகின்றனர்.
இந்த மருந்தினை ஏற்றுமதி செய்ய அமெரிக்காவின் மருந்து மற்றும் உணவு நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, அங்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்குள்ளானவர்களுக்கு இந்த மருந்து வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இந்த மருந்தினை இந்தியாவில் மார்க்கெட்டிங் செய்வதற்காக இந்தியாவின் மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கை இதுவரையில் பரிசீலனையில் தான் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதே ரெம்டேசிவிர் மருந்தை இந்திய மருந்து நிறுவனங்களான சிப்லா மற்றும் ஹெட்ரோ லாப்ஸ் சார்பாக இந்தியாவில் மார்க்கெட்டிங் செய்ய அனுமதி கோரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.