அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற விரும்பும் வெளிநாட்டவர்கள் அந்நாட்டிடமிருந்து 'கிரீன் கார்டு' (Green Card) வாங்க வேண்டும். ஒவ்வொரு நாட்டிற்கும், ஆண்டுக்கு ஏழு விழுக்காடு வீதம் 'கிரீன் கார்டு' வழங்க உச்சவரம்பு விதிக்கப்பட்டுள்ளது.
இதனால், அமெரிக்காவில் ஹெச்-1பி நுழைவுஇசைவில் (விசா) பணிபுரியும் திறமை வாய்ந்த வெளிநாட்டவர்கள் நிரந்தர குடியுரிமைக்காகப் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவிவருகிறது. இதில், தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் இந்தியர்களே அதிகளவில் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
இந்நிலையில், இந்த கிரீன் கார்டு மீதான ஏழு விழுக்காடு இட ஒதுக்கீட்டை, 15 விழுக்காடாக உயர்த்தும் சட்டத் திருத்த மசோதா அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் (கீழ் சபை) நிறைவேறியுள்ளது.
'ஃபெயர்னெஸ் ஃபார் ஹை-ஸ்கில்டு இம்மிகிரான்ட்ஸ் ஆக்ட் 2019' (Fairness For High-Skilled Immigrants Act 2019) அல்லது 'ஹெச்.ஆர். 1044' (HR 1044) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தச் சட்டத் திருத்த மசோதாவுக்கு 365 எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த மசோதாவைக் கொண்டு வருவதில் முன்னணி வகித்த அமெரிக்க வாழ் இந்தியரான சுனைனா துமாலா பேசுகையில், "இந்த நாளுக்காக நாங்கள் பல ஆண்டுகள் காத்திருந்தோம். ஒரு வழியாக எங்களின் கடின உழைப்புக்குப் பலன் கிடைத்துவிட்டது" என மகிழ்ச்சி தெரிவித்தார்.
ஹைதராபாத்தில் பிறந்த சுனைனா துமாலா, கடந்த ஆண்டு அமெரிக்காவின் ஒலாதே நகரில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தன் கணவன் ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லாவை இழந்து தனியாக வசித்துவருகிறார்.
இந்த மசோதாவானது செயல்பாட்டிற்கு வர அமெரிக்கா செனட் சபையிலும் (நாடாளுமன்ற மேல் சபை) நிறைவேற்ற வேண்டும். அதனைத் தொடர்ந்து அதில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திடுவார்.