உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை ஒரு லட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் அதிகரித்துவரும் இத்தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக மே 3 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்தியாவுக்கு வந்து செல்லும் அனைத்து விதமான போக்குவரத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன.
ஊரடங்கு உத்தரவால் வெளிநாட்டைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் இந்தியாவிலும், இந்தியர்கள் வெளிநாட்டிலும் தவித்துவருகின்றனர். அவர்களை மீட்கும் முயற்சியில் அந்தந்த நாடுகளின் தூதரங்கள் ஈடுபட்டுவருகின்றன. அந்தவகையில், இந்தியாவில் சிக்கியுள்ள ஆறாயிரம் பேர் உள்பட பிற நாடுகளில் தவித்துவரும் 17 ஆயிரம் அமெரிக்கர்களும் தங்களது சொந்த நாட்டிற்குத் திரும்பச் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அதன் ஒருபகுதியாக, இந்தியாவில் உள்ள நான்காயிரம் அமெரிக்கர்கள் தனிவிமானம் மூலம் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தலைமை துணைச் செயலர் இயன் பிரவுன்லீ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "நாங்கள் ஏற்கனவே நான்காயிரம் அமெரிக்கர்களை இந்தியாவிலிருந்து மீட்டுள்ளோம். எஞ்சியுள்ள இரண்டாயிரம் அமெரிக்கர்களை மீட்கவும் வரும் நாள்களில் நான்கு விமானங்களை அனுப்பி வைக்கவுள்ளோம்.
ஊரடங்கு நேரத்தில் அமெரிக்கர்களை மும்பைக்கும், டெல்லிக்கும் அழைத்துச் சென்று அங்கிருந்து அமெரிக்காவிற்கு அழைத்துச் வருவது சாதரணமான விஷயமல்ல. இச்சேவையின் போது இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதர்கள், அமெரிக்கர்களுடன் ஒருங்கிணைந்து சிறப்பாக செயல்பட்டனர்" என்றார்.
இதையும் படிங்க: அறிகுறியின்றி பரவும் கரோனா - சீனாவுக்குப் புதிய தலைவலி!