அமெரிக்காவில் உள்ள NORAD எனப்படும் வட அமெரிக்க விண்வெளி பாதுகாப்புக் கட்டளை மையத்தினர் விண்வெளி குறித்த எச்சரிக்கை செய்தி அளித்தல், வட அமெரிக்காவிற்கான கடல் எச்சரிக்கை செய்தி அளித்தல் உள்ளிட்ட கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், NORAD தனது ட்விட்டர் பக்கத்தில், "அலாஸ்கா கடற்கரைப் பகுதியில் அதிநவீன குண்டுகளுடன் பறந்து வந்த இரண்டு ரஷ்ய அமைப்புகளைச் சேர்ந்த விமானங்கள், அமெரிக்க போர் விமானங்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
முதலில் வந்த ரஷ்ய அமைப்பினரிடம் இரண்டு TU - 95 குண்டுகள் அடங்கிய விமானங்கள், இரண்டு SU - 35 போர் விமானங்கள், A - 50 வான்வழி ஆரம்ப எச்சரிக்கை, கட்டுப்பாட்டு விமானங்கள் ஆகியவை இருந்தன. இவை அலாஸ்கன் கரையிலிருந்து 20 நாட்டிக்கல் மைல்களுக்குள் பறந்து வந்து கொண்டிருந்தன.
இரண்டாவது வந்த ரஷ்ய அமைப்பினரிடம் இரண்டு TU - 95 குண்டுகள் அடங்கிய விமானமும், A - 50 வான்வழி எச்சரிக்கை விமானமும் இருந்தன. இவை அலாஸ்கன் கரையிலிருந்து 32 மைல்களுக்குள் வந்து கொண்டிருந்தன.
இந்த விமானங்கள் அமெரிக்க எல்லைக்குள் நுழைவதற்கு முன்பே அமெரிக்க போர் விமானங்களால் தடுத்து நிறுத்தப்பட்டன " எனப் பதிவிடப்பட்டுள்ளது.