பாகிஸ்தானின் மேற்கு பகுதியான பலூசிஸ்தான் மாகாணத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு முதல் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பலூசிஸ்தான் நகரில் வாழும் பலூச் இன இஸ்லாமியர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என்பதே இந்த கிளர்ச்சியாளர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. மேலும் அவர்கள் அப்பகுதியில் உள்ள பாதுகாப்பு படையினர், மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இந்த பலூசிஸ்தான் விடுதலை அமைப்பினர், பாகிஸ்தானில் சீனா மேற்கொண்டுவரும் முதலீடு உள்ளிட்டவைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது மட்டுமல்லாது கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் சீன பொறியாளர்கள் மீது தற்கொலைப்படைத் தாக்குதல், நவம்பரில் சீன தூதரகம் மீது தாக்குதல் என பல்வேறு பல தாக்குதல்களையும் நடத்தியுள்ளனர்.
சமீபத்தில் கடந்த மே மாதம் குவாதார் நகரில் உள்ள விடுதியில் நடைபெற்ற தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பொறுப்பேற்ற இந்த அமைப்பு, அங்கு நடைபெற்று வரும் சீனாவின் திட்டங்களை நிறுத்துமாறு எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில் நேற்று அமெரிக்க அரசு பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், பலூச்சிஸ்தான் விடுதலை அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து உத்தரவு பிறப்பித்தது. மேலும் இந்த அமைப்பிற்கு நிதி உதவி அளிக்கும் அமெரிக்கர்கள் குற்றவாளிகளாக கருதப்படுவார்கள் என்றும், அவ்வாறு உதவி புரிவோரின் சொத்துக்கள் முடக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.